கஜகஸ்தான்,
விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து 3 வீரர்கள் இன்று சோயுஸ் விண்கலம் மூலம் தரை இறங்கினர்.
விண்வெளி, கிரகங்கள் பற்றி ஆய்வு செய்வதற்காக ரஷியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கூட்டாக இணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன.
இங்கு பல்வேறு ஆய்வுகள் மற்றும் ஆராய்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.
ஆய்வுகள் மற்றும் ஆராய்சிகளை மேற்கொள்வதற்காக சுழற்சி முறையில் பல நாட்டு விண்வெளி வீரர்கள்-வீராங்கனைகள் விண்வெளி ஓடத்தற்கு சென்று வருகிறார்கள்.
அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசாவை சேர்ந்த கேட் ருபின்ஸ், ரஷியாவின் விண்வெளி ஆய்வு மையமான ராஸ்காஸ்மோஸ்-ஐ சேர்ந்த அனடாலி இவானிஷின், ஜப்பான் நாட்டின் விண்வெளி ஆய்வு மையத்தை சேர்ந்த டக்குயா ஓனிஷி ஆகியோர் விண்வெளியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தில் தங்கியிருந்து மரபணுக்கள் தொடர்பான ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு வகை ஆய்வுகளில் ஈடுபட்டு வந்தனர்.
இவர்கள் மூவரும் தங்களது ஆய்வுகளை முடித்துகொண்டு ரஷியாவின் ’சோயுஸ்’ விண்கலத்தின் மூலம் கஜகஸ்தானில் உள்ள ழெஸ்கஸ்கான் நகரின் ஒரு தாழ்வான பகுதியில் பத்திரமாக தரையிறங்கினர்.
3 வீரர்களுடன் சர்வதேச விண்வெளி ஓடத்தில் இருந்து புறப்பட்ட இந்த விண்கலம் 3 மணி நேரத்தில் கஜகஸ்தானில் தரையிறங்கியது.
அங்கு தயாராக காத்திருந்த மீட்புப் படையினர் அவர்களை வரவேற்று அழைத்து சென்றனர்.
ஏற்கனவே இந்தியா வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி ஆய்வு மையம் சென்று வந்தது குறிப்பிடத்தக்கது.