கடந்தமுறை ஆஸ்திரேலியாவில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றபோது, அந்த அணியில் டேவிட் வார்னரும், ஸ்டீவ் ஸ்மித்தும் இல்லாதது பெரிய காரணமாக கூறப்பட்டது பலரால்.
தற்போது இந்த டெஸ்ட் தொடரை எடுத்துக்கொண்டால், டி-20 தொடரின்போதே காயமடைந்த டேவிட் வார்னர், இந்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் கலந்து கொள்ளவில்லை. அவர், அடுத்தப் போட்டிகளில் பங்கேற்பாரா? என்பது இன்னும் உறுதியாகவில்லை.
ஸ்டீவ் ஸ்மித்தை எடுத்துக்கொண்டால், அவர் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டார். சதமெல்லாம் அடித்தார். டி-20 தொடரில் சொல்லும் வகையில் சோபிக்கவில்லை.
ஆனால், கடந்த 2 டெஸ்ட் போட்டிகளில் அவரின் நிலைமை படுமோசம். முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். அப்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் அவருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பில்லை.
பின்னர், பாக்ஸிங் டே டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் டக்அவுட் ஆனார். சரி, இரண்டாவது இன்னிங்ஸிலாவது ஆடுவார் என்று எதிர்பார்த்தால் அதிலும் 8 ரன்களுக்கு நடையைக் கட்டினார்.
டேவிட் வார்னர் இருந்திருந்தால் ஆஸ்திரேலியா சமாளித்திருக்கும் என்ற வாதமெல்லாம் எந்த வகையிலும் ஏற்க முடியாதது. ஏனெனில், கடந்த 2 டெஸ்ட் போட்டிகளிலும், ஆஸ்திரேலியாவின் எந்த பேட்ஸ்மெனும் இந்தியப் பந்துவீச்சாளர்களுக்கு சவாலாக இருக்கவில்லை. மாறாக, சில இந்திய பேட்ஸ்மென்கள்தான் ஆஸ்திரேலியர்களுக்கு கடும் சவாலாக இருந்தனர்.
இந்திய அணியில்கூட, ரோகித் ஷர்மா இல்லை, இஷாந்த் ஷர்மா இல்லை, விராத் கோலி இல்லை, முகமது ஷமி இல்லை என்பன போன்ற பல பிரச்சினைகள் இருந்தன.
எனவே, முதல் டெஸ்ட் போட்டியில், வலுவான ஆஸ்திரேலியாவிடம் தோற்ற இந்திய அணி, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வலுவான ஆஸ்திரேலியாவை எளிதாக வென்றுள்ளது என்ற முடிவிற்கே வர முடிகிறது.