டெல்லி: சமஸ்கிருத பேராசிரியராக இஸ்லாமியரை நியமித்ததற்கு புகழ்பெற்ற பனாரஸ் இந்து பல்கலைக்கழக மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பிரபல பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் சமஸ்கிருத துறையில் உதவி பேராசிரியராக கடந்த 7ம் தேதி பெரோஸ் கான் என்பவர் நியமிக்கப்பட்டார்.
அதற்கு பல்கலைக்கழக மாணவர்கள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அவரது நியமனத்தை ரத்து செய்யக் கோரி இந்து அமைப்புகளை சேர்ந்த மாணவர் அமைப்பினர், துணைவேந்தர் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களது போராட்டம் தொடர்ந்து நீடிக்கிறது. அதனால், பணி நியமனம் செய்யப்பட்ட நாளில் இருந்து இன்று வரை பெரோஸ் கானால், மாணவர்களுக்கு பாடம் எடுக்கமுடியவில்லை.


இது தொடர்பாக போராட்டத்தை முன்னெடுத்துள்ள ஆராய்ச்சி மாணவர் கிருஷ்ணகுமார் கூறியிருப்பதாவது: எங்கள் கலாச்சாரம், உணர்வுகளுடன் தொடர்பில்லாத ஒரு நபர் எப்படி எங்களை புரிந்து கொள்வார்? எங்களின் சிந்தனைகளை உணர்வார்? என்றார்.
மற்ற மாணவர்களா ன சஷிகாந்த், சுப்னம், சக்ரபாணி ஆகியோரும் இந்த போராட்டத்தில் குதித்துள்ளனர். இது குறித்து பேசிய சஷிகாந்த், போராட்டத்துக்கு எந்த அரசியல் கட்சிகளும் ஆதரவளிக்கவில்லை, தொடக்க காலத்தில் நான் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இருந்தேன் என்றார்.
மற்ற இருவரும் ஏபிவிபி அமைப்பை சேர்ந்தவர்கள் என்பதை ஒப்புக் கொண்டிருக்கின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை பல்கலைக்கழக நிர்வாகம் சமாதானப்படுத்த முனைந்தது. ஆனால், அது பலனளிக்கவில்லை.


பல்கலைக்கழகத்தின் மற்ற பேராசிரியர்களும், பெரோஸ் கானுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களை சட்டப்படி தண்டிக்க வேண்டும் என்று கூறி இருக்கின்றனர்.
பிரச்னையின் மையப்புள்ளியான பெரோஸ் கான் கூறி இருப்பதாவது: என் வாழ்க்கையில் நான் சமஸ்கிருதம் கற்றுக் கொண்டேன். ஆனால் எந்த தருணத்திலும் தான் ஒரு இஸ்லாமியர் என்பதை உணர்ந்ததே இல்லை. ஆனால், அதை கற்றுக் கொடுக்க வேண்டும் என்று முயற்சிக்கும் போது, விவாதப்பொருளாகி விடுகிறது என்றார்.
பெரோஸ் கான், சமஸ்கிருதத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். 2018ம் ஆண்டு ஜெய்பூரில் உள்ள நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் பிஎச்டி பட்டம் வென்றவர். மாணவர்களின் போராட்டத்தின் எதிரொலியால், பெரோஸ் கான் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. அவரது செல்போனும் அணைத்து வைக்கப்பட்டு இருக்கிறது.