பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கியுள்ள முன்னாள் அமைச்சரும், கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவருமான டி.கே.சிவகுமார், சிபிஐ அதிகாரிகள் முன் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் டி.கே.சிவகுமார். இவர்மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக எழுந்த புகாரின்பேரில் ராமநகர், பெங்களூரு, டெல்லியில் உள்ள வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அப்போது அவரது வீட்டில் இருந்து ரூ.8.50 கோடி மதிப்பிலான பணம் மற்றும் ஆவனங்கள் சிக்கயதாக கூறப்பட்டது.
இதையடுத்து, டி.கே.சிவக்குமார் மீது வருமான வரித்துறை வழக்குப்பதிவு செய்தது. மேலும், சட்டவிரோதமாக சொத்து குவித்தது தொடர்பாக சிபிஐயும் விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக கடந்த 19-ந் தேதி சி.பி.ஐ. நோட்டீசு வழங்கியது. ஆனால், கட்சி தொடர்பாக சுற்றுப்பயணத்தை காரணம் காட்டி, 25-ந் தேதி விசாரணைக்கு ஆஜராவதாக பதில் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, நேற்று மாலை 3.50 மணிக்கு பெங்களூரு கங்காநகரில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்திற்கு டி.கே.சிவக்குமார் சென்று அதிகாரிகள் முன்பு ஆஜரானார். அப்போது சோதனையின் போது தங்களிடம் சிக்கிய ஆவணங்களை காட்டி டி.கே.சிவக்குமாரிடம், சி.பி.ஐ. அதிகாரிகள் கேள்வி எழுப்பியதாகவும், அதற்கு அவர் பதில் அளித்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. சுமார் 40 நிமிடங்கள் நடைபெற்ற விசாரணை மாலை 4.45 மணிக்கு நிறைவு பெற்றதாக கூறப்படுகிறது.