பாட்னா :

பீகார் மாநிலத்தில் அண்மையில் தான் சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதீஷ்குமார், நான்காம் முறையாக முதல்-அமைச்சர் நாற்காலியில் அமர்ந்துள்ளார்.

இந்த தேர்தலில் மறைந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி தனியாக போட்டியிட்டு ஒரு தொகுதியில் மட்டும் வென்றது.

இப்போது லோக் ஜனசக்தி கட்சியின் தலைவராக இருக்கும் பஸ்வானின் மகன், சிராக் பஸ்வான், தேர்தல் முடிவால் சோர்வடைத்துள்ள தொண்டர்களை நேரில் சந்தித்து வருகிறார்.

நேற்று நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் “மக்களவையில் ஆறு எம்.பி.க்களையும், மாநிலங்களவையில் ஒரு உறுப்பினரையும் வைத்திருந்த நமது கட்சிக்கு, சட்டப்பேரவை தேர்தலின் போது, 15 இடங்களை மட்டுமே தருவதாக என்.டி.ஏ. கூட்டணி சொன்னதால் தனியாக போட்டியிட்டோம்” என தெரிவித்தார்.

“கடந்த முறை அந்த கூட்டணியில் அங்கம் வகித்து நாம் போட்டியிட்ட போது இரு இடங்களில் வென்றோம். ஆனால் இப்போது தனியாக நின்று ஒரு இடத்தில் வென்றுள்ளோம்” என அவர் குறிப்பிட்டார்.

“இந்த அரசின் செயல்பாடுகளை பார்த்தால் பீகார் மாநில சட்டபேரவைக்கு மீண்டும் தேர்தல் வரக்கூடும் என நினைக்கிறேன். எனவே தேர்தல் ஏற்பாடுகளை ஆரம்பியுங்கள்” என சிராக் பஸ்வான் தொண்டர்களை கேட்டுக்கொண்டார்.

– பா. பாரதி