மேற்குவங்க மாநிலத்தில், சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், தனக்கு கடுமையான போட்டியைத் தரக்கூடிய பாரதீய ஜனதாவை எதிர்த்து பம்பரத்தைவிட பயங்கரமாக சுழன்று களமாடி வருகிறார் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், அம்மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி.
பிரஷாந்த் கிஷோரை தன் பக்கம் வைத்துக்கொண்டு, சரத்பவார் போன்றோரின் ஆலோசனைகளை வலிய சென்று பெற்று, பாஜகவுக்கு எதிரான வேறுபல அஸ்திரங்களைப் பயன்படுத்தி என்று, ஓய்வில்லாமல் தொடர்ந்து களமாடி வருகிறார்.
தனக்கு ஏற்பட்ட காயத்தைக்கூட, அவர் தேர்தல் ஆதாயமாக பயன்படுத்த முயல்கிறார். கருத்துக் கணிப்புகள்கூட, அவர் மூன்றாவது முறையாக வெற்றி பெறுவார் என்றே தெரிவிக்கின்ற. காங்கிரஸ் – இடதுசாரிகள் அமைத்துள்ள மூன்றாவது அணியை மீறியே மம்தா பானர்ஜி வெல்ல வேண்டியுள்ளது.
ஆனால், கடந்த 2019ம் ஆண்டு, சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களை ஒருங்கே எதிர்கொண்டார் அப்போதைய ஆந்திர முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடு. ஒய்எஸ்ஆர் தலைவர் ஜெகன்மோகன் அத்தேர்தல்களில் சந்திரபாபுவுக்கு பெரிய ஆபத்தாக வளர்ந்து நின்றார்.
பாஜகவும், ஜெகன்மோகனுக்கு உதவும் வகையிலேயே தனது தேர்தல் உத்திகளை அம்மாநிலத்தில் அப்போது மேற்கொண்டது. ஆனால், நிலைமை கைமீறி சென்றுகொண்டிருந்த நேரத்தில், அதுகுறித்து கவலைப்பட்டு கவனம் செலுத்தாமல், ஏதோ, தனக்கு வெற்றி உறுதி என்று தன்னளவில் நினைத்துக்கொண்டு, டெல்லி, கொல்கத்தா மற்றும் சென்னை என்று பல ஊர்களுக்கும் பறந்துகொண்டு, 3வது அணியைக் கட்டமைக்கும் வேலைகளில் பிஸியாக இருந்துகொண்டிருந்தார் சந்திரபாபு நாயுடு.
பல்வேறு வியூகங்களை அமைத்து, தேர்தல் களத்தில் ஓயாது உழைத்திருக்க வேண்டிய நேரத்தில், தேவையற்ற அரசியல் பயணங்களை மேற்கொண்டிருந்தார் சந்திரபாபு.
விளைவு, ஆந்திராவில், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் அவரின் கட்சி படுதோல்வியை சந்தித்து, இன்று சிக்கலான அரசியல் சூழலில் மாட்டிக்கொண்டுள்ளது.