திஸ்பூர்:

சாம் மாநிலத்தில் கொட்டி வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இதுவரை 88 பேர் உயிரிழந்துள்ளதாகவும், லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது..

வட மாநிலங்களில் கொட்டி தீர்த்த கனமழையால் அசாம், பீகார் மாநிலங்களில் மோசமான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பீகாரில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 104-ஐ எட்டியது. இதே போல் அசாம் மாநிலத்தில் 88 பேர் உயிரிழந்துள்ளனர்.

அசாமில் உள்ள காசிரங்கா தேசிய பூங்காவில் விலங்குகளும் வெள்ளத்தால் உயிரிழந்துள்ளன. அங்கிருந்த 16 காண்டாமிருகங்கள் உட்பட 187 விலங்குகள் இறந்துள்ளன. 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் 757 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் சுமார் 1 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளன.

தொடர்ந்து பெய்யும் மழையால் பிரம்மப்புத்திரா உள்பட பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு அபாய கட்டத்தை எட்டியுள்ளது. மாநிலத்தில் உள்ள 12 மாவட்டங்கள் முற்றிலும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

தேமாஜி, டாரங், பர்பேடா, பிஸ்வநாத், சோனிப்பூர், சிராங், காம்ரூப் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் ஒரு லட்சத்து 65 ஆயிரம் மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகின்றனர்.

மாநிலத்தின் பல பகுதிகளில் வாகன போக்குவரத்து மற்றும் ரெயில் சேவைகள் ஸ்தம்பித்துள்ளன. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.  இந்த நிலையில் அங்கு மழை நீடித்து வருகிறது. தொடர்ந்து  கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 88 ஆக அதிகரித்துள்ளது என தேசிய பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.