குவாஹாத்தி: வனத்துறையினரால் சமீபத்தில் கட்டுப்படுத்தப்பட்ட ஒரு  முரட்டு காட்டு யானை அடைபட்ட நிலையிலேயே உயிரிழந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

“விலங்கு நன்றாக இருந்தது, ஆனால் இன்று (17ம் தேதி) அதிகாலை 5.30 மணியளவில் அது இறந்துவிட்டதாக பராமரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்” என்று ஒராங் தேசிய பூங்காவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேற்கு அசாமின் கோல்பாரா மாவட்டத்தில் உள்ள ரோங்ஜூலி வனப் பிரிவில் இருந்து நவம்பர் 11 ஆம் தேதி 35 வயதான ஆண் யானை பிடிபட்டது. வனத்துறை நவம்பர் 12 ஆம் தேதி ஒராங் தேசிய பூங்காவிற்கு யானையை இடமாற்றம் செய்தது.

உள்ளூர் வாசிகள், மறைந்த அல்கொய்தா தலைவரான ஒசாமா பின்லேடனின் பெயரை அந்த முரட்டு யானைக்கு  சூட்டியிருந்தாலும் அது பிடிபட்ட பின்னர் அதற்கு “கிருஷ்ணா” என்று பெயரிடப்பட்டது.

அசாம் அரசு ஏற்கனவே யானையின் இறப்புக்கான காரணத்தை பிரேதப் பரிசோதனை மூலம் அறிய, கே.கே சர்மா உட்பட கால்நடை மருத்துவ நிபுணர் குழுவை அனுப்பியிருந்தது.

மருந்துகள் மூலம் யானை கட்டுப்படுத்தப்பட்ட பின்னர், வனத்துறை யானையை வனப்பகுதிகளில் விடுவிக்க திட்டமிட்டிருந்தாலும், காட்டில் விடுவிப்பதை எதிர்த்து பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அதை சிறை வைக்க முடிவு செய்தனர். யானை மீண்டும் அருகிலுள்ள மனித வாழ்விடங்களைத் தாக்கக்கூடும் என்று மக்கள் பயந்தனர்.

 

.