சென்னை,
கோவையில் ஆளுநர் ஆய்வு செய்வது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் செல்லூர் ராஜு, இதுகுறித்து முதலமைச்சரிடம் கேட்க வேண்டியதுதானே என்று பதில் கூறினார். இது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் இரண்டு நாட்களாக கோவை பகுதியில் ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார். இது வரம்பு மீறிய செயல் என அனைத்து கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ஆளுநரின் ஆய்வு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், சென்னை திருவல்லிக்கேணியில் அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அமைச்சர், இதுகுறித்து முதலமைச்சரிடம் கேட்பதை விடுத்து தன்னிடம் கேள்வி எழுப்பக்கூடாது என கூறினார். மேலும் , மாநில உரிமைகளை தி.மு.க.வை காட்டிலும் அ.தி.மு.க. அரசு ஒருபோதும் விட்டுக்கொடுக்காது என்றும் கூறினார்.
அமைச்சரின், முதலமைச்சரிடம் கேளுங்கள் என்ற பதில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆளுநரின் ஆய்வுக்கு ஒருசில அமைச்சர்கள் வரவேற்பு செய்துள்ள நிலையில், அதிமுக எம்.பி. அன்வர் ராஜா வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
அதுபோல, தற்போது அமைச்சர் செல்லூர் ராஜுவின் பதிலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.