கோவை மாவட்டம் அன்னூருக்கு அருகே இருக்கும் கோவில் பாளையத்திலிருந்து 25 கி.மீ தொலைவில் காலகாலேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.

இக்கோவிலின் மூலவராக சிவபெருமான் அருள் பாலிக்கிறார். இந்த கோவில் கிட்டதட்ட 2000 ஆண்டுகள் பழமையான கோவிலாகும்.

தனக்கு நேர்ந்த சாபத்திலிருந்து விடுபட எமதர்மன் சிவலிங்கம் செய்து இங்கே வணங்கினார் என்பது ஐதீகம். எமனுக்கு காலன் என்ற பெயருண்டு.

காலனுக்கே குருவாக இருப்பதால் இங்கிருக்கும் சிவபெருமானுக்கு காலகாலேஸ்வரர் என்பது திருப்பெயர். இங்கிருக்கும் அம்பாளுக்கு கருணாகரவல்லி என்பது திருப்பெயர்.

இந்த கோவில் 8 ஆம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்ட கோவிலாகும். கோவில்பாளையத்தில் கெளசிகா நதியின் கரையில் அமைந்துள்ளது.

இந்த கோவிலில் அமைந்துள்ள தட்சிணாமூர்த்தி திருவுருவம் ஆசியாவிலேயே மிகப்பெரிய திருவுருவ சிலையாக கருதப்படுகிறது. தட்சிணாமூர்த்தியை போலவே இங்கிருக்கும் நந்தியும் சிறப்பு வாய்ந்தவராவார்.

மற்ற கோவில்களில் இருப்பதை போல அல்லாமல் இங்கிருக்கும் நந்தி ஒரு காலத்தில் பச்சை நிறத்தில் தோன்றிவந்தார் அதனால் இவரை மரகத நந்தி என்றும் அழைப்பதுண்டு.

இங்கிருக்கும் மூலவரின் சிறப்பு யாதெனில் அவருடைய திருவுருவம் மணல் மற்றும் நுரையால் செய்யப்பட்டது எனவே இவருக்கு தயிர், நெய், பஞ்சாமிர்தம் ஆகியவற்றில் அபிஷேகம் செய்யப்படுவதில்லை.

இங்கிருக்கும் சிவபெருமான் சந்நிதிக்கும், அம்பாள் சந்நிதிக்கும் இடையே முருக பெருமானின் சந்நிதி சோமஸ்கந்தர் வடிவில் அமைந்துள்ளது. இங்கிருக்கும் முருக பெருமானுக்கு கால சுப்ரமணியர் என்பது திருப்பெயர்.

இந்த கோவிலில் சாந்தி ஹோமம், சஷ்டியப்த பூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம் ஆகியவற்றை செய்வது சிறப்புமிக்கதாக கருதப்படுகிறது.