குவான்டன்:
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது.
தென்கொரிய அணிக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் பெனால்டி ஷூட் முறையில் 5 – 4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.
ஆண்களுக்கான 4வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் மலேசியாவின் குவான்டன் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணி தென்கொரிய அணியை எதிர்கொண்டது. ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் 2 – 2 என்ற கோல் கணக்கில் சம நிலையில் இருந்தன.
இந்திய அணி சார்பில் 15வது நிமிடத்தில் தல்விந்தர் சிங் ஒரு கோல் அடித்தார்.
இதையடுத்து ராமன்தீப் சிங் 55வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதேபோல் தென் கொரிய அணிக்கு இன்வோ சியோ (21வது நிமிடம்), ஜிஹுன் யாங் (53வது) தலா ஒரு கோல் அடித்ததால் போட்டி டையில் முடிந்தது.
இதையடுத்து பெனால்டி ஷூட் அவுட் முறை பின்பற்றப்பட்டது.
இதில் 5 கோல் அடித்து அசத்திய இந்திய வீரர்கள் 5 – 4 என்ற கணக்கில் வெற்றி பெற்றனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி ஆசிய சாம்பியன் கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.