சேலம்: சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே 1,000 கோடி ரூபாயில் கட்டப்பட்ட ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா மற்றும் கல்லூரியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார்.

கடந்த 2019ம் ஆண்டு  பிப்ரவரி 13ந்தேதி அன்று சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்போது,   விதி எண் 110ன் கீழ்  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,  சேலம் மாவட்டம் தலைவாசலில் 900 ஏக்கரில் ரூ.396 கோடியில் கால்நடை பூங்கா அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

அதன்படி,  சேலம் மாவட்டம் தலைவாசல் கூட்டு ரோடு அருகே கால்நடை பராமரிப்புத்துறைக்குச் சொந்தமான 900 ஏக்கர் நிலத்தில் 396 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கால்நடை பராமரிப்பு, பால் வளம், மீன் வள நடைமுறைகள் மற்றும் தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய உலகத் தரம் வாய்ந்த, ஆசியாவிலேயே மிகப்பெரிய பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த பூங்காவில்,  கால்நடை பண்ணை வளாகம், நவீன வசதிகளைக் கொண்ட கால்நடை மருத்துவமனை, நவீன பண்ணை முறைகளை விவசாயிகளுக்கு எடுத்துக் காட்டும் வகையில் கறவை மாட்டுப்பண்ணையுடன் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக்கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பூங்காவில்,  கால்நடை அறிவியல் பல்கலைக்கழக மாணவர்கள் பயிற்சி மேற்கொள்ளவும், உலக நாடுகளில் உள்ள கால்நடை மருத்துவம் படிக்கின்ற மாணவர்கள் ஆராய்ச்சி மேற்கொள்ளவும் ஏற்ற வகையில் 3-வது பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. பயிற்சி, கல்வி, ஆராய்ச்சி மற்றும் தொழில் முனைவோருக்கான பயிலரங்கம் இதில் இடம்பெற்றுள்ளன.

கால்நடைப்பூங்காவின் முதல் பிரிவான கால்நடைப் பண்ணை வளாகத்தில், நவீன வசதிகளை கொண்ட கால்நடை மருத்துவமனை, கறவை மாட்டுப்பண்ணை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

2வது பிரிவில் , பால், இறைச்சி, மீன் மற்றும் முட்டை போன்றவற்றைப் பதப்படுத்தவும், அவற்றில் இருந்து மதிப்பு கூட்டிய பொருட்களை தயார் செய்யவும், சந்தைப்படுத்தவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர மரபு திறன் மிக்க நாட்டின மற்றும் கலப்பின காளைகளின் புதிய உறைவிந்து உற்பத்தி நிலையமும் இதே வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கான பட்ஜெட் தற்போது ரூ.1000 கோடி என கூறப்படுகிறது. இந்த பூங்காவானது  ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா மற்றும் கல்லூரி என்ற பெருமையை பெற்றுள்ளது.

இந்த பூங்காவை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் முன்னிலையில்  தமிழக முதல்வர்  எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார்.  அத்துடன் 118 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழகத்தின் 5ஆவது கால்நடை மருத்துவக் கல்லூரியையும் அவர் தொடங்கி வைக்கிறார்.