டில்லி
மூத்த காங்கிரஸ் தலைவர் கபில்சிபல் பீகார் தேர்தல் குறித்து தெரிவித்த கருத்துக்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாத் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த பீகார் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி தோல்வி அடைந்துள்ளது. இந்த கூட்டணியில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி 80 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 27 இடங்களிலும் வெற்றி பெற்றன. காங்கிரஸ் கட்சிக்கு 6% வாக்குகள் கிடைத்தன. இது காங்கிரஸ் தலைவர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது.
மூத்த காங்கிரஸ் தலைவரான கபில்சிபல் ஒரு நாளிதழுக்கு அளித்த பேட்டியில் ஆளும் கட்சிக்கு மாற்றாகக் காங்கிரஸ் கட்சி இனியும் இருக்காது எனக் கூறினார். மேலும் அவர் கட்சித்தலைமை இதைக் கவனிக்கவில்லை எனவும் தெரிவித்த அவர் கட்சிக்கு இந்த பிரச்சினைகள் குறித்தும் எப்படி இதை நேர் கொள்ள வேண்டும் என்பது குறித்தும் நன்கு தெரிந்தும் அதைச் செயல்படுத்த விருப்பமின்றி உள்ளதாகத் தெரிவித்தார்.
கபில்சிபல் கூறியதை மாநிலங்களவை காங்கிரஸ் உறுப்பினரான தன்கா ஆதரித்துள்ளார். இது குறித்து தன்கா, “கட்சி வீழ்ச்சி அடைவதாக நாங்கள் கருதவில்லை. பலரும் தங்கள் சொந்த பிரச்சினைக்காக அப்படிப் பேசலாம். ஆனால் எனக்கும் கபில்சிபலுக்கும் எந்த ஒரு பிரச்சினையும் இல்லை. எங்களது பிரச்சினை காங்கிரஸைப் புனரமைப்பது மட்டுமே ஆகும். எங்களைப் போன்றோர் இது குறித்துப் பேசவில்லை எனில் வரலாறு எங்களை மன்னிக்காது” எனத் தெரிவித்துள்ளார்.
கபில்சிபல் மற்றும் தன்காவின் அடிப்படையில் மக்களவை உறுப்பினரான கார்த்தி சிதம்பரமும் கருத்து தெரிவித்துள்ளார். அவர், “தற்போது காங்கிரஸ் கட்சியைப் புனரமைக்கும் உள்நோக்கத்துடன் சிந்தித்து ஆலோசித்துச் செயல்படுத்தச் சரியான நேரம் வந்துள்ளது.” என டிவிட்டரில் பதிந்துள்ளார்.
இது குறித்து ராஜஸ்தான் முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான அசோக் கெலாத், “கபில்சிபல் காங்கிரஸ் கட்சியின் உள் விவகாரங்களை ஊடகங்களில் தெரிவித்தது தேவையற்றது. இதனால் கட்சி தொண்டர்கள் மிகவும் மனம் புண்படுவார்கள். காங்கிரஸ் ஏற்கனவே 1969, 1977, 1989 மற்றும் 1996 ஆம் வருடங்களில் பல பிரச்சினைகளைச் சந்தித்துள்ளது.
ஆனால் ஒவ்வொரு முறையும் கட்சி அதன் கொள்கை, தலைமை மீதான நம்பிக்கை மற்றும் கோட்பாடுகள் மேலும் வலுவுடன் மீண்டு வந்துள்ளது. ஒவ்வொரு பிரச்சினையின் மூலமும் தன்னை மேம்படுத்திக் கொண்ட காங்கிரஸ் கட்சி சோனியாஜியின் தலைமையின் மூலம் ஐக்கிய முன்னணி கூட்டணி ஆட்சியை 2004 இல் அமைத்தது. அதைப் போல் தற்போதைய நிலையிலும் நாம் மீண்டு வருவோம்” எனத் தெரிவித்துள்ளார்.
இளைஞர் காங்கிரஸ் தலைவர் சீனிவாஸ், “காங்கிரஸ் கட்சி பல தேர்தல்களில் வெற்றி பெற்றபோது அதற்கான பெருமை ராகுல்ஜிக்கு அளிக்கப்படவில்லை. ஆனால் ஏதாவது ஒரு தேர்தலில் தோல்வி அடைந்தாலும் அவரை பொறுப்பாக்குவது நடந்து வருகிறது. தற்போது கேள்வி எழுப்பும் பலர் கட்சியைப் பலப்படுத்த என்ன செய்து வருகிறீர்கள் என நான் கேட்கிறேன்.” என கபில்சிபல் குறித்து டிவிட்டரில் பதிந்துள்ளார்.
காங்கிரஸ் கட்சிக்குள் இவ்வாறு வார்த்தை போர் நடந்து வருகையில் கபில்சிபலுக்கு டில்லி காங்கிரஸ் தலைவர் அனில் சவுத்ரி டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலையும் பிரதமர் மோடியையும் எதிர்த்து அரசியல் செய்ய வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். மேலும் டில்லி சாந்தினி சவுக் மக்களவை தொகுதி உறுப்பினரான கபில்சிபல் டில்லி காங்கிரஸ் கட்சியில் எந்த ஒரு துறையிலாவது தினம் பணி புரிய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.