நான் ஒரு ஏழைத்தாயின் மகன், தேநீர் விற்றவன், ஒரு எளிமையான ஆர்எஸ்எஸ் துறவி மற்றும் எனது எளிய பின்னணியால், என்னை டெல்லியின் டாம்பீகம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது என்ற பிரச்சாரத்தை தொடர்ச்சியாக பொதுவெளியில் பேசிவரும் நரேந்திர மோடிக்கும், ஒரு பிரதமராக கடந்த 5 ஆண்டுகளில் செயல்பட்ட நரேந்திர மோடிக்கும் உள்ள கடும் முரண்பாடுகளை எடுத்துரைக்கிறார் விரிந்தா கோபிநாத் என்ற பத்திரிகையாளர்.

பிரதமர் மோடியின் கடும் முரண்பாடுகள் குறித்து அவர் கூறுவதன் தொகுப்பு:

தான் குஜராத்திலிருந்து வந்தவன் என்பதால், என்னை டெல்லியின் டாம்பீகம் ஏற்க மறுக்கிறது என்று, நேரு குடும்பத்தை மறைமுகமாக குறிப்பிட்டு தாக்குவதற்கு எப்போதுமே சலிப்பையோ, சோர்வையோ காட்டாதவர் நரேந்திர மோடி.

ஆனால், மதசார்பற்ற பண்பாட்டைப் பின்பற்றி வந்த டெல்லியின் முந்தைய அதிகார மையங்கள், மோ‍டி – ஆர்எஸ்எஸ் கூட்டணியின் இந்துத்துவ பிரிவினைவாத அரசியலை எதிர்க்கின்றன என்ற வகையில், மோடி கூறுவதை நாம் பொருள் கொள்ள வேண்டுமே தவிர, அவரின் அர்த்தத்தில் அல்ல.

தன்னுடைய எளிமையான பின்னணி குறித்தே எப்போதும் பேசிவரும் அளவிற்கு, கொள்கை சார்ந்த அரசியல் குறித்து மோடி பேசுவதில்லை. அவரின் ஒப்பீடு எப்போதுமே, இளவரசன் – கடுமையாக உழைக்கும் வீரன், மேட்டுக்குடி – பின்தங்கிய வகுப்பு, சீர்திருத்தப்பட்ட – கரடுமுரடான என்பதாகவே இருக்கிறது.

இத்தகைய அவரின் ஒப்பீடுகள், தான் ஒரு எளிமையான ஆர்எஸ்எஸ் பிரச்சாரக துறவி என்ற அடையாளப்படுத்தலோடும் சேர்ந்தே வரும் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். தனது தாயார் ஹீராபென், மிக எளிமையான ஒரு வீட்டில் இன்றும் வசிக்கிறார் என்பதும் மோடியின் சுயபட்சாதாப வசனங்களில் முக்கிய இடம்பெறும் ஒரு விஷயம்.

 

தனது இமேஜை டாம்பீக டெல்லியால் எதுவும் செய்ய முடியாது. ஏனெனில், அதை ‍அந்த டாம்பீகம் உருவாக்கவில்லை. தனது 45 ஆண்டுகால தவ வாழ்க்கையின் விளைவால் உருவான ஒன்று என்றும் தனது ஆதரவு ஊடகங்களில் கூறிக்கொள்வார். ‘தான் சிறுவயதில் தேநீர் விற்றவன்’ என்ற மோடியின் புகழ்பெற்ற சுய விளம்பரத்தை (அது இன்றுவரை எப்போதும் நிரூபிக்கப்பட்டதில்லை) நாம் இங்கே மறந்துவிடலாகாது.

மோடியின் இந்த சுயவிளம்பர வெளியிடல்களெல்லாம், அவருக்கு ஆதரவான மீடியாக்களில், எதிர்த்து கேள்விகள் கேட்கப்பட முடியாத ஒருவழி உரையாடல் மூலமே நிகழ்கின்றன என்பதையும் கவனிக்க வேண்டும். மேலும், அவரின் ஆதரவு ஊடகங்களும் இத்தகைய பிரச்சாரத்தை சிரமேற்கொண்டு செய்து வருகின்றன.

டாம்பீக டெல்லி என்பதான மோடி பரிவாரங்களின் கோயபல்ஸ் பிரச்சாரம், உண்மையாகும் வரை திரும்ப திரும்ப சொல்லப்பட்டுக் கொண்டே வருகிறது. ஆனால், இந்தப் பிரச்சாரத்தை அவர்களால் நீண்ட நாட்களுக்கு தக்கவைக்க முடியாது.

தன்னை மிக எளிமையான பின்னணியிலிருந்து வந்தவன் என்றும், டாம்பீக டெல்லி தன்னை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது என்றும் பிரச்சாரம் செய்துகொள்பவரின் தற்போதைய வாழ்க்கை நிலை என்ன?

கோடிக்கணக்கான மக்கள் மோசமான வறுமையின் பிடியில் சிக்கி வாழும் ஒரு நாட்டின் எளிய பிரதமர் வாழும் முறையிலா அவர் வாழ்கிறார்?

12 ஏக்கர் பரப்பளவில், 5 வீடுகள் கொண்ட, தலைநகர் டெல்லியின் அழகிய சோலையில் அமைந்த, பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்திலிருந்து அவர் வெளியேறியிருக்கலாமே? அந்த 5 வீடுகளின் உள் அலங்கார அமைப்புகள் குறித்த விளக்கங்கள், பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியில் சொல்லப்படக்கூடாது என்ற சட்டதிட்டங்கள் வேறு உண்டு.

அந்த வளாகத்தில், தனியான தங்குமிடங்கள், விருந்தினர் அறைகள், குடும்ப உறுப்பினர்களுக்கான தங்குமிடங்கள் மற்றும் பொழுதுபோக்கு நிலையங்களும் உண்டு. இந்த பிரமாண்ட வளாகம், 50க்கும் மேற்பட்ட தோட்டக்காரர்கள், ஓட்டுநர்கள், பராமரிப்பாளர்கள், சமையல்காரர்கள் மற்றும் மின்சாரப் பணியாளர்கள் ஆகியோரைக் கொண்டு பராமரிப்பு செய்யப்படுகிறது.

மேலும், மருத்துவர்கள், செவிலியர்கள், முடி திருத்துநர்கள் மற்றும் தையலகர் உள்ளிட்டோரும் உண்டு. அந்த வளாகத்தில், அனைத்து சிறப்பான வசதிகளையும் தன்னகத்தே பெற்ற ஒரு ஆம்புலன்ஸ் எப்போதும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். இந்த வளாகத்தின் பராமரிப்பிற்காக பல கோடி ரூபாய்கள் செலவழிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

எளிய மோடியால், எதற்காக இந்த பகட்டான இல்லத்தை விட்டு வெளியேற முடியவில்லை. ஒரு நாளைக்கு 20 மணிநேரத்திற்கு மேல் கடுமையாக உழைத்து, வெறுமனே 3 முதல் 4 மணிநேரங்கள் மட்டுமே அபூர்வமாய் உறங்குவதாக கொஞ்சமும் சலிப்பின்றி தொடர்ச்சியாக கூறிக்கொள்ளும் மோடிக்கு, இத்தகைய பகட்டான இல்லம் தேவையா?

ஒரு ஏழைத் தாயின் மகனாகப் பிறந்து, தேநீர் விற்பனை செய்து, தவ வாழ்க்கையை வாழும் எளிய துறவியாக தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் மோடிக்கு, எதற்காக இந்த ஆடம்பர மாளிகை வளாகம்?

ஒருவேளை மோடி எளிமையானவராகவும், ஏழையாகவும் வாழ்வதற்கு அதிக பணம் தேவைப்படுகிறது போலும்..!

டெல்லி நகரை சுற்றி வருவதற்கு குண்டு துளைக்காத 5 பிஎம்டபிள்யூ செடான் மற்றும் ரேன்ஜ் ரோவர் ரக கார்கள் மற்றும் வெளிநாடுகளில் சுற்றிவர போயிங் 747 ஜம்போ ஜெட் விமானம் போன்றவைகளைப் பயன்படுத்துகிறார்.

பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்களில், அவருடன் செல்லும் அதிகாரிகள், வர்த்தகப் பிரதிநிதிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் ஆகியோரையும் அழைத்துச் செல்ல பெரிய விமானம் தேவைதான் என வைத்துக்கொண்டாலும், பத்திரிகையாளர்களைக் கண்டாலே ஆகாத பிரதமர், அவர்கள் இல்லாமல்தான், குறைந்தளவு அதிகாரிகளுடன் அவ்வளவு பெரிய விமானத்தில் பயணிக்கிறார்.

இதுவரை, பிரதமரின் வெளிநாட்டுப் பயணத்திற்காக ரூ.443.4 கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும், இன்னும் 5 நாடுகளுக்கு சென்றுவந்த செலவு விபரங்களை கணக்கிட வேண்டியுள்ளதாகவும் தகவல் அறியும் உரிமைச் சட்ட விபரங்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம், பிரதமரின் உள்நாட்டு பயண விபரங்களை தாங்கள் பதிவுசெய்வதில்லை என பிரதமர் அலுவலகம் அறிவித்திருப்பதையும் கவனிக்க வேண்டும்.

தேநீர் விற்ற பின்னணியிலிருந்து வந்து எளிமையான வாழ்க்கை மேற்கொள்ளும் பிரதமர், தனது வெளிநாட்டுப் பயணங்களுக்கு, ஒரு சாதாரண பிசினஸ் ஜெட் பயன்படுத்தினால் போதாதா?

இதன்மூலம் வரிகட்டும் ஏழை மக்களின் பணத்தை மிச்சப்படுத்தலாமே? கடந்த 5 ஆண்டுகளில் இவரின் வெளிநாட்டுப் பயண செலவினங்கள் மட்டும் ரூ.2,021 கோடிகள். அதாவது, ஒரு ஆண்டிற்கு சராசரியாக ரூ.400 கோடிக்கும் மேல்.

உடனே, கடந்தகால பிரதமர்களும் தங்களின் வெளிநாட்டுப் பயணத்திற்காக இந்தளவு பெரிய தொகையை செலவழித்துள்ளார்கள் என மோடியின் பக்தர்கள் கூறுவார்கள். ஆனால், அவர்கள் மோடியைப் போல் எளிய மற்றும் துறவு வாழ்க்கை வாழும் மனிதர்களா?

மோடியின் ஆடம்பரம் இந்தளவில் மட்டும் நிற்கவில்லை! தன்னைப் பற்றியும் தனது அரசினுடைய திட்டங்கள் குறித்தும் செய்யப்பட்ட விளம்பரங்களுக்கு மட்டுமே 2018 வரையான நான்காண்டுகளில் செலவு செய்யப்பட்ட தொகை ரூ.4,400 கோடிகள் என்று தகவல் அறியும் உரிமைச் சட்ட விபரங்கள் கூறுகின்றன.

ஆனால், திட்டங்களுக்காக மோடி செய்த விளம்பர செலவோடு, அந்த திட்டங்களின் விளைவுகள் மற்றும் நன்மைகளை ஆராய்ந்தால் நிலைமை மிகவும் மோசம் என்றே தகவல்கள் கூறுகின்றன.

இந்த தேர்தல் ஆண்டில் மட்டும் மோடியின் பாரதீய ஜனதா கட்சி, வங்கிகள் விற்பனை செய்த தேர்தல் பத்திரங்களில் 94% ஐ வாங்கி குவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அக்கட்சியின் முகநூல் மற்றும் இதர சமூகவலைதள அம்சங்களில், மில்லியன் கணக்கான டாலர்கள் புழங்குவதையும் கவனிக்க வேண்டும்.

இவையெல்லாம் ஒருபுறமிருக்க, தனது தனிப்பட்ட ஆடம்பர வாழ்வு என்று வருகையில், மோடி அதிலும் பல சாதனைகளை செய்கிறார். மோடியின் பகட்டான உடைகள் கடும் விமர்சனத்தை சம்பாதித்தவை என்பது நாமெல்லாம் அறியாத ஒன்றல்ல.

வெளிநாட்டு ஊடகங்கள்கூட, இந்த முட்டாள்தனமான பகட்டு குறித்து குறிப்பிட்டுள்ளன. இவரின் உடைகள் தொடர்பான நிற தேர்வுகள் ‘கடவுளால் கொடுக்கப்பட்டது’ என்று வேறு அறிவித்துக் கொள்கிறார்.

அகமதாபாத்தை சேர்ந்த பிபின் செளஹான் என்ற மோடியின் தையல்காரர் ஒருமுறை மோடி சொன்னதாக கூறிய விஷயத்தை நீங்களும் கேளுங்கள். “தான் எப்போதுமே கண்கள், குரல் மற்றும் உடை தொடர்பாக எந்த சமரசமும் செய்துகொள்ள மாட்டேன் என்று மோடி என்னிடம் சொல்லியிருக்கிறார் ” என்கிறார்.

மோடி அணியும் குர்தாக்கள், மோடியின் ஜாக்கெட்டுகள், ஆடம்பரமாக வேலைப்பாடு செய்யப்பட்ட காஷ்மீர் வெள்ளாட்டு கம்பளி சால்வை, புகழ்வாய்ந்த சூட்டுகள், விலையுயர்ந்த கண்ணாடிகள், மொவாடோ கைக்கடிகாரங்கள் மற்றும் மான்ட் பிளாங்க் பேனாக்கள் போன்றவை அந்த எளிமையான துறவிக்கான அடையாளங்களா?

மோடி உல்லாசத்தில் பெரும் நாட்டம் கொண்டவராகவே காணப்படுகிறார். இவரின் பெயர் பல இடங்களில் பொறிக்கப்பட்டு, ரூ.10 லட்சம் செலவில் தயாரானதாக கூறப்படும் சூட்டை யாராவது மறந்திருக்க முடியுமா? அல்லது தனது மார்பகலத்தின் அளவை பிரகடனப்படுத்திக் கொண்டதைத்தான் மறக்க முடியுமா? இதையெல்லாம் ஒரு எளிய துறவியிடம் நம்மால் எதிர்பார்க்க முடியுமா?

மோடியின் தலைமுடியும் தாடியும் மிகச்சரியான வெண்மையில், எப்போதுமே மிகச் சரியான அளவில் காட்சித் தருகிறதென்றால், வாரம்தோறும் முறையாக பராமரித்தால் மட்டுமே முடியும். மோடியின் தனிப்பட்ட சிகை அலங்கார நிபுணர் ஜாவித் ஹபீப் இதை உறுதிபடுத்துகிறார்.

மேலும், முகத்தின் பொலிவை பராமரிப்பதற்காக அவர் வாரம்தோறும் எடுத்துக்கொள்ளும் விலையுயர்ந்த ஃபேஷியல் சிகிச்சை குறித்தும், தனது மேனியின் பொலிவை பராமரிக்கும் பொருட்டு அவர் உட்கொள்ளும் மிகவும் விலை உயர்ந்த காளான்கள் குறித்தும் பல தகவல்கள் வெளிவருகின்றன என்பதையும் நாம் மறத்தலாகாது. இவை தொடர்பாக ஊடக விவாதங்களும் நடந்தேறியுள்ளன.

மோடியின் ஆடம்பர பகட்டுகளெல்லாம் ஒருபுறமிருக்க, அவரின் உண்மையான கல்வித் தகுதி என்ன? என்பதை நாம் யோசித்தோமானால், அனைத்துமே மர்மமாக இருக்கும். அவரால் சரியான முறையில் அடைய முடியாத கல்வித் தகுதியை, போலியாக பெற்றுக் கொண்டார்.

இவர் பெற்றதாக கூறப்படும் அரசியல் அறிவியல் பட்டம் குறித்த பிரச்சினை இன்னும் முடிந்தபாடில்லை. அதன் மீதான தீர்ப்பு, அவர் தேர்தலில் நிற்பதையே காலிசெய்யும். ஆனால், “ஹாவர்ட் பல்கலையைவிட, கடின உழைப்பு என்பது மிகவும் சக்தி வாய்ந்தது” என்று கர்ஜிக்கிறார்.

மொத்தத்தில் இன்றைய மோடியின் வாழ்க்கை என்பது, அதிக செலவில் பராமரிக்கப்படும் ஒரு சவாரி வண்டி.

என்று இறுதியாக தனது கருத்தை நிறைவுசெய்கிறார் கட்டுரையாளர்.

 

– மதுரை மாயாண்டி