சென்னை:  வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள தீவிர புயலான அசானி 24 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதேவேளையில் இன்றும் நாளையும் இதே வானிலை தொடரும் என்றும், வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் வெயிலின் தாக்கம் உக்கிரமடையும் என்றும் கூறியுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள வானிலை முன் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. ஆசானி புயலின் தாக்கம் காரணமாக தமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கோயம்புத்தூர், திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

கடந்த ஆறு மணி நேரத்தில் மணிக்கு 7 கிலோ மீட்டர் வேகத்தில் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து இன்று இரவு வரை வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திரா அதனை ஒட்டிய ஒடிசா கடற்கரை அருகே மத்திய மேற்கு வங்க கடலில் நிலைகொள்ளும்.

அதன்பிறகு திசையில் மாற்றம் ஏற்பட்டு வடக்கு – வடகிழக்கு திசையில் நகர்ந்து வட மேற்கு வங்க கடல் பகுதியில் வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்கரை அருகே கரையை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆந்திராவின் ஸ்ரீகாகுளம், விஜயநகரம், விசாகப்பட்டினம் மற்றும் கிழக்கு கோதாவரி உள்ளிட்ட பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக விசாகப்பட்டின புயல் எச்சரிக்கை மையம் அறிவித்து உள்ளது.

மேலும் வரும் 24 மணி நேரத்தில்  வலுவிழக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்,  தீவிர புயல் அசானி-யின் வெளிப்புற மேகங்கள் காற்றின் திசைக்கு ஏற்ப  நிலப்பரப்பிற்குள் வருகின்றன. இது தமிழ்நாட்டின் வட மாவட்டங்கள் மீதும் வருவதினால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை கிடைத்துள்ளது.  இது மேலும் தொடரக்கூடிய வாய்ப்பு அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்த நிலையில், தற்போது, வங்க கடலில் நிலைகொண்டுள்ள அசானி புயலின் வெளிசுற்று மேகங்கள் செங்கல்பட்டு, திருவள்ளூர் & சென்னை மாவட்டங்களை ஒட்டி செல்கிறது.. இதன் காரணமாக சென்னை சுற்று வட்டாரத்தில் முதல் கோடை கால மழை பெய்து வருகிறது. இதே போல வேலூர், திருவள்ளூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், சித்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் லேசான சாரல் மழை பெய்கிறது.

இந்த மழை மாலை இரவு வேளையில் வலுப்பெற்று சற்றே மிதமான மழையாக பொழியும் என்றும், இந்த வானிலை 2 நாட்களுக்கு தொடரும் என்று தெரிவித்துள்ள வானிலை மையம், வரும் வெள்ளி கிழமை க்கு பிறகு இயல்பை காட்டிலும் 3 முதல் 5 ℃ அளவுக்கு வெப்பம் உயரகூடும் என்றும் எச்சரித்துள்ளது.