சென்னை
சென்னை ஐசிஎஃப் இல் தயாரான டிரெயின் 18 ரெயிலின் உதிரிபாகங்கள் கொள்முதல் குறித்து புலனாய்வுத் துறை விசாரணை நடத்தி வருகிறது.
சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் தயாரான டிரெயின் 18 மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்டது. இந்த இஞ்சின் இல்லா ரெயில் மணிக்கு 180 முதல் 200 கிமீ வேகத்தில் செல்லக் கூடியதாகும். இந்த ரெயில் ரூ.97 கோடி செலவில் தயாரிக்கப்பட்டது. பிரதமர் மோடியால் துவக்கப்பட்ட இந்த ரெயில் இந்திய ரெயில்வே துறையின் ஒரு சாதனையாக புகழப்பட்டது.
ரெயிலில் உள்ள பல மின்சார சாதனங்கள் ஐசிஎஃப் வடிவமைத்து வெளியில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது. இதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக புலனாய்வுத் துறைக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது அதை ஒட்டி சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் புலனாய்வுத் துறை விசாரணை மேற்கொண்டுள்ளது. இது சம்பந்தமான கோப்புகள் ஆராயப்பட்டு வருகின்றன.
இந்த விசாரணை முடியும் வரையில் கொள்முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் டிரெயின் 18 உற்பத்தி தாமதமாக உள்ளது. இது குறித்து ஐசிஎஃப் அதிகாரிகள் கூட்டத்தில் தலைமை அதிகாரி ஸ்ரீதரன் இந்திய ரெயில்வே கொள்முதல் விதிகளை மீறியதாக புலனாய்வு துறை விசாரித்து வருவதால் உற்பத்தி தாமதம் ஆவதாக தெரிவித்துள்ளார்.