ஸ்ரீநகர்

காஷ்மீர் திவிரவாதி ஜாகிர் மூசா கொல்லப்பட்டதாக கூறப்படுவதால் மாநிலத்தில் வன்முறை வெடிக்கும் என அஞ்சப்படுகிறது.

காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த அன்சர் கசவத் உல் இந்த் இயக்கம் பாகிஸ்தானின் அல் கொய்தா இயக்கத்துடன் தொடர்புடையதாகும். இந்த இயக்கத்தின் தலைவனான ஜாகிர் மூசா என்பவன் இந்த பகுதியில் பிரபலமான தீவிரவாதிகளில் ஒருவன் ஆவான். இந்த தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் தெற்கு காஷ்மீர் பகுதியில் உள்ள ஒரு சிற்றூரில் மறைந்துள்ளதாக தகவல்கள் வந்தன.

அதை ஒட்டி ராணுவத்தினர் அந்த பகுதியை சுற்றி வளத்தனர். அப்போது நடந்த என் கவுண்டரில் இரு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களில் ஒருவன் ஜாகிர் மூசா என சந்தேகிக்கப்படுகிறது. இதை ராணுவம் உறுதிப்படுத்தவில்லை. மூசாவின் குடும்பத்தார் அவன் அங்கு பதுங்கி இருந்ததை உறுதிப்படுத்தி உள்ளனர். இதனால் காஷ்மீர் மக்களிடையே கடும் பதட்டம் நிலவுகிறது.

மாநிலத்தில் சோபியன், புல்வாமா, அவந்திபுரா மற்றும் ஸ்ரீநகரின் சில பகுதிகளில் மக்கள் குழுமி நின்று ஜாகிர் மூசாவுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பி உள்ளனர். இதனால் மாநிலத்தில் வன்முறை வெடிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

அதை ஒட்டி மாநிலத்தின் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. துப்பாக்கி சூடு நடந்த பகுதியில் மேலும் பல தீவிரவாதிகள் தங்கி இருக்கலாம் என்னும் சந்தேகத்தால் தேடுதல் வேட்டை தொடர்கிறது.