காபூல்
ஆப்கானில் விமான நிலையங்களைத் தாலிபான்கள் மூடி உள்ளதால் தரை வழியாக மக்கள் எல்லையை கடக்கின்றனர்.
அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து திரும்பப் பெறப்படும் என அறிவித்ததில் இருந்து தாலிபான்கள் ஒவ்வொரு நகராக கைப்பற்றத் தொடங்கினர். இறுதியாகத் தலைநகர் காபூலைக் கைப்பற்றி ஆப்கானில் புதிய ஆட்சி அமைக்க உள்ளனர். ஆப்கான் அதிபர் நாட்டை விட்டு வெளியேறி உள்ளார். ஆப்கான் மக்களும் நாட்டை விட்டு வெளியேற விமான நிலையத்தில் ஏராளமாகக் குவிந்தனர். அமெரிக்கப் படைகள் நேற்று முன் தினம் முழுவதுமாக வெளியேறியது.
இதையொட்டி தாலிபான்கள் ஆப்கானிஸ்தான் வான்வழிப் போக்குவரத்தை தடை செய்து அனைத்து விமான நிலையங்களையும் மூடி உள்ளனர். எனவே ஆப்கான் நாட்டில் இருந்து செல்ல முயலும் அந்நாட்டவரும் வெளிநாட்டவர்களும் கடும் துயரம் அடைந்துள்ளனர். எனவே அவர்கள் தரை வழிப்பயணமாக ஆப்கானிஸ்தான் நாட்டு எல்லைக்குச் சென்று வெளியேறி வருகின்றனர்.
எனவே எல்லைப் பகுதிகளில் தாலிபான்கள் ராணுவத்தினரைக் குவித்துள்ளனர். தற்போது எல்லைப் பகுதி முழுவதும் தாலிபான் அமைப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்குள்ள தாலிபான் படையைச் சேர்ந்த பாதுகாவலர்கள் வணிகர்களையும், நாட்டை விட்டு வெளியேற முறையான ஆவணங்களைக் கொண்டிருப்பவர்களை மட்டுமே பயணத்தைத் தொடர அனுமதிக்கின்றதாக கூறப்படுகிறது.
ஆப்கானிஸ்தான் நாட்டுடன் நில ரீதியாக இணைந்துள்ள அண்டை நாடுகள் தங்கள் நாட்டின் எல்லை கதவுகளைத் திறந்து வைத்திருக்கும்படி ஐ நா சபை வலியுறுத்தியுள்ளது மேலும் ஐநா சபை அண்டை நாடுகள் புகலிடம் தேடி வரும் மக்களுக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டுகோள் விடுத்துள்ளது. தவிர ஆப்கானிஸ்தான் நாட்டை ஒட்டியுள்ள நாடுகளுக்கு உதவுமாறு அனைத்து உலக நாடுகளையும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது .