சென்னை

கேரளாவின் பெரும்பாலான பகுதிகளும் தமிழகத்தின் சில பகுதிகளுக் தென்மேற்க் பருவழை தொடங்கி உள்ளது.

வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கும். இந்த ஆண்டு முன்கூட்டியே பருவமழை நேற்று கேரளாவில் பெரும்பாலான பகுதிகளிலும், லட்சத்தீவு மற்றும் தென் தமிழகத்தின் சில பகுதிகளிலும் தொடங்கி விட்டதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.

தென்மேற்கு பருவமழை மற்றும் தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 3-ந்தேதி (திங்கட்கிழமை) வரை மழை பெய்யக் கூடும் என்று ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.

இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.  நாளை மற்றும் நாளை மறுதினம் தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகள், திருச்சி, நாமக்கல் ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக் கூடும்.

திங்கட்கிழமை தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது. கனமழை பெய்யக்கூடிய பகுதிகளுக்கு நிர்வாக ரீதியாக ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 4 நாட்களாக வட மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் சில இடங்கள் ஆகியவற்றில் வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்தது. இன்று சில இடங்களில் இயல்பைவிட 5 டிகிரி பாரன்ஹீட் வரை அதிகரிக்கும். மற்ற பகுதிகளில் இயல்பையொட்டி இருக்கும். நாளை முதல் 3-ந்தேதி வரை வெப்பம் சற்று குறைந்து காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனையொட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 35 கி.மீ. முதல் 55 கி.மீ. வரையிலான வேகத்தில் இன்றும், நாளையும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டு இருக்கின்றனர்.