டில்லி
மகாராஷ்டிர மாநில மக்கள் தற்போது பாஜகவுக்கு எதிராக உள்ளதாகத் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கு 105 இடங்களும், சிவசேனாவுக்கு 56 இடங்களும் தேசிய வாத காங்கிர்சுக்கு 54 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 44 இடங்களும் கிடைத்துள்ளன. இதில் பாஜக மற்றும் சிவசேனா கட்சி கூட்டணியில் அதிகார பகிர்வு குறித்து சர்ச்சைகள் ஏற்பட்டன. சிவசேனா கட்சியின் இரண்டரை வருட முதல்வர் பதவி கோரிக்கைக்கு பாஜக மறுப்பு தெரிவித்தது.
இதனால் ஆட்சி அமைக்க முடியாத நிலைக்கு பாஜக தள்ளப்பட்டது. இந்நிலையில் சிவசேனா கட்சி எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க முயன்றதாகத் தகவல்கள் வெளியாகின. சிவசேனா கட்சியின் தலைவர்கள் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருடன் சந்திப்பு நிகழ்த்தினர். இது குறித்துப் பல ஊகங்கள் வெளியாகின.
இந்நிலையில் நேற்று டில்லி வந்த சரத் பவார் காங்கிரஸ் கட்சியின் தலைவியான சோனியா காந்தியை சந்தித்துப் பேசி உள்ளார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம், “கூட்டணி குறித்து என்னிடம் பாஜக மற்றும் சிவசேனா ஆகிய எந்தக் கட்சிகளும் பேசவில்லை. எனது கட்சிக்கு பெரும்பான்மை கிடையாது. ஆகவே நாங்கள் எதிர்க்கட்சியாக இயங்க உள்ளோம். தற்போது மகாராஷ்டிர மக்கள் பாஜகவுக்கு எதிராக உள்ளனர். நான் இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்துப் பேசினேன்.
தற்போது மகாராஷ்டிர மாநில அரசியல் நிலையை அவருக்கு விவரித்தேன். அரசு அமைப்பது குறித்து நாங்கள் விவாதிக்கவில்லை. எங்களிடம் அரசு அமைக்கத் தேவையான உறுப்பினர்கள் இல்லாததால் எதிர்க்கட்சி வரிசையில் அமர உள்ளோம் என்பதை அவரும் ஒப்புக் கொண்டார். அரசு அமைப்பது குறித்து நாங்கள் சிவசேனாவிடம் பேசவில்லை. அவர்களும் எங்களிடம் பேசவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.