டில்லி

சென்ற பிப்ரவரி மாதம் வோடபோன் நிறுவனம் 34.6 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ள நிலையில் ஜியோ 62.5 லட்சம் வாடிக்கையாளர்களை இணைத்துள்ளது.

சென்ற பிப்ரவரி மாதம் 29 முடியத் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் குறித்த விவரங்களை டிராய் வெளியிட்டுள்ளது.   இந்த விவரங்களின்படி மொத்த ஒயர்லெஸ் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதாவது 2 ஜி, 3 ஜி மற்றும் 4 ஜி இணைந்து 116 கோடியை எட்டி உள்ளது.  இது சென்ற மாதத்தை விட 0.36% அதிகமாகும்.

இதைப் போல் பிராட்பாண்ட் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 68.1 கோடியாக உயர்ந்துள்ளது. இது சென்ற மாதத்தை விட 1.15% அதிகமாகும்.

மொத்த வாடிக்கையாளர்களில் ஜியோவில் 32.9%,  ஏர்டெல் நிறுவனத்தில் 28.35% மற்றும் வோடபோன் நிறுவனத்தில் 28% பேர் உள்ளனர்   தொடர்ந்து ஜியோ முதல் இடத்தில் உள்ளது.

பிப்ரவரி மாதம் மட்டும் மொத்த வாடிக்கையாளர்களில் ஜியோ வில் 62.57 லட்சம், மற்றும் ஏர் டெல் லில் 9.2 லட்சம் பேர் அதிகரித்துள்ளனர்.   வோடோபோன் நிறுவனம் இவற்றுக்கு நேர்மாறாக 34.6 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது.

மொபைல் சேவை வழங்கும் நிறுவனங்களில் அரசு நிறுவனமான பி எஸ் என் எல் நிறுவனம் பிப்ரவரி மாதம் 4.39 லட்சம் கூடுதல் வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதத்தின் படி மொத்த வாடிக்கையாளர்களில் 5 சேவை நிறுவனங்கள் 98.99% வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது.    இதில் ஜியோவில் 38.367 கோடி, ஏர்டெல் 14.61 கோடி, வோடபோன் ஐடியா 11.825 கோடி மற்றும் பிஎஸ்என்எல் 2.467 கோடி வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளன.