மெல்பேர்ன்

செர்பியாவின் பிரபல டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாததால் ஆஸ்திரேலியா விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.

அகில உலக அளவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வது தீவிரமாக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சம் காரணமாகப் படித்தோர் முதல் பாமரர் வரை அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்கின்றனர்.   இந்நிலையில் செர்பியாவின் பிரபல டென்னிஸ் வீரரான நோவக் ஜோகோவிச் தடுப்பூசி போட்டுக் கொள்ள மறுத்து வருகிறார்.

தற்போது நடைபெற உள்ள ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச் பங்கு பெற வேண்டும் என்றால் அவர் கொரோனா தடுப்பூசி  போட்டு கொண்ட சான்றிதழை அளிக்க வேண்டும்.  தம்முடைய உடல்நிலை பிரச்சினை காரணமாகத் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளவில்லை எனவும் அதற்கான விலக்கைத் தாம் பெற்றுள்ளதால் போட்டியில் கலந்து கொள்ளப் போவதாகவும் ஜோகோவிச் அறிவித்தார்.

இதையொட்டி ஜோகோவிச் ஆஸ்திரேலியா வந்துள்ள நிலையில் அவரை விமான நிலைய அதிகாரிகள் தடுத்து நிறுத்தி உள்ளனர்.  ஜோகோவிச் பெற்றுள்ள விசாவின் அடிப்படையில் அவர் தடுப்பூசி போட்டுக் கொண்டால் மட்டுமே ஆஸ்திரேலியா நாட்டுக்குள் நுழைய முடியும் என்பது விசா விதிகளில் ஒன்றாகும்.  எனவே விதிகளின் அடிப்படையில் அவர் திருப்பி அனுப்பப்படுவார் எனவும் இதனால் அவர் ஆஸ்திரேலிய ஓப்பன் போட்டிகளில் பங்கேற்க முடியாது எனவும் கூறப்படுகிறது.