கொல்கத்தா

ந்திகிராம் தொகுதியில் வேட்பு மனுத் தாக்கல் செய்த மேற்கு வங்க முதல்வர் மீது தாக்குதல் நடந்ததால் காலில் காயத்துடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த மாதம் இறுதியில் இருந்து 8 கட்டங்களாக மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது.   இந்த தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் தனது திருணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் மம்தா பானர்ஜி போட்டியிட உள்ளார்.   நந்திகிராம் தொகுதி கொல்கத்தாவில் இருந்து சுமார் 130 கிமீ தூரத்தில் உள்ளது.

அங்கு மம்தா வேட்புமனு தாக்கல் செய்யச் சென்றுள்ளார்.  அப்போது அவர் காரில் ஏற வந்த போது 4 அல்லது 5 பேர் அவரை தள்ளி விட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.   இதனால் மம்தா கீழே விழுந்துள்ளார்.  அவருக்குக் காலில் காயம் ஏற்பட்டு நடக்க முடியாமல் திணறி உள்ளார்.  இதையொட்டி அவரது பாதுகாப்பு அதிகாரிகள் அவரை தூக்கி காரில் உட்கார வைத்தனர்.

அவரிடம் செய்தியாளர்கள் இந்த தாக்குதல் குறித்துக் கேட்ட போது அவர், ”இது திட்டமிட்ட தாக்குதல் ஆகும்.  நீங்களே என்னைச் சுற்றி காவல்துறையினர் யாரும் இல்லை என்பதைப் பார்க்கலாம்.  எனது கால் கடுமையாக வீங்கி உள்ளது” எனத் தெரிவித்தார்.  தற்போது காலில் காயத்துடன் மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மம்தா தாக்கப்பட்ட செய்தி நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  மேற்கு வங்கத்தில் திருணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கடும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  இந்த சம்பவம் குறித்து மாநிலத் தலைமைச் செயலாளரை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.