டில்லி

காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்ததால் மலேசியா மற்றும் துருக்கி மீது இந்தியா கடும் கோபத்தில் உள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி இந்திய அரசு விதி எண் 370 ஐ ரத்து செய்து காஷ்மீருக்கு வழங்கி இருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது.    அம்மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது.   இதற்கு முன்னெச்சரிக்கையாகப் பல எதிர்க்கட்சி தலைவர்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர்.  மாநிலம் முழுவதும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராகப் பாகிஸ்தான் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.   ஐநா பாதுகாப்புச் சபை உள்ளிட்ட பல இடங்களில் இந்தியாவைக் குறித்து பாகிஸ்தான் அளித்த புகார் நிராகரிக்கப்பட்டது.   மலேசியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.   இது குறித்து இந்தியா இரு நாடுகள் மீதும் கடும் கோபத்தில் உள்ளது.

துருக்கி நாட்டுக்கு இந்தியா போர்க்கப்பல்கள் அமைக்கும் பணியை அளித்திருந்தது.  அந்நாடு தற்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக உள்ளதாலும் பாகிஸ்தானுக்குப் போர்க் கப்பல்கள் அமைக்கும் பணியையும் ஏற்றுக் கொண்டதாலும் இந்தியா துருக்கிக்கு அளித்திருந்த பணி உத்தரவை ரத்து செய்துள்ளது.  அத்துடன் சிரியாவில் துருக்கி நடத்திய தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது

மலேசிய அதிபராக மகாதீர் முகமது மீண்டும் தேர்வு செய்த போது இந்தியப் பிரதமர் மோடி அவருக்கு முதல் ஆளாகப் பாராட்டு தெரிவித்தார்.   இந்தியா மலேசியாவுக்கு நட்புக்கரம் நீட்டிய போதும் மலேசியா அதை ஏற்காமல் காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவு அளித்தது.   அதையடுத்து மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயில் உள்ளிட்ட பொருட்களை இந்தியா குறைத்துள்ளது.

இந்திய இறக்குமதியாளர்கள் தற்போது பாமாயிலை மலேசியாவுக்கு பதிலாக இந்தோனேசியாவில் இருந்து வாங்கத் தொடங்கி உள்ளனர்.  உலகில் மிக அதிகமாக பாமாயில் இறக்குமதி செய்யும் நாடான இந்தியா தனது மலேசிய வர்த்தகத்தைப் பெருமளவு குறைத்துக் கொண்டதால் மலேசிய வர்த்தகம் வீழ்ச்சி அடைந்துள்ளது.

இது குறித்து மலேசியாவின் நடவடிக்கைகளைப் பொறுத்து இந்தியா தனது அடுத்த அடியை எடுத்து வைக்கும் என தெரிய வந்துள்ளது.