டார்ஜிலிங்

த்திய அரசு நேற்று லடாக் பகுதியை யூனியன் பிரதேசமாக  அறிவித்தது கூர்க்காலாந்து பிரச்சினையை தூண்டிஉள்ளது.

நேற்று விதி எண் 370 நீக்கப்பட்டு காஷ்மீர் மாநிலம் இரு  பாகங்களாக யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டது. அத்துடன் லடாக் சட்டப்பேரவை அற்ற யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற இரு பகுதிகளான ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதிகள் சட்டப்பேரவை உள்ள யூனியன் பிரதேசம் ஆகி உள்ளது. பல கட்சிகள் இதை ஆதரித்த போதும் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் இதைக் கடுமையாக எதிர்த்து வருகிறது.

மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் பகுதியில் உள மக்கள் இதைப் போல்  ஒரு யூனியன் பிரதேசமாக தங்களை பிரித்து அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். அங்கு கூர்க்கா இனத்தவர் அதிகம் உள்ளதால் அதை கூர்க்காலாந்து என பெயர் சூட்டவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்துப் பல வருடங்களாக போராட்டம் நடந்தும் மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது லடாக் பகுதி காஷ்மீரில் இருந்து பிரிக்கப்பட்டு யூனியன் பிரதேசமாக அறிவித்துள்ளது.

இந்த பகுதியில் மத்திய பாஜக அரசை எதிர்த்துப் பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த சுவரொட்டியில், “கடந்த மக்களவை தேர்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் எங்கள் பிரச்சினைக்கு அளிப்பதாகச் சொன்ன நிரந்தர முடிவு என்ன என்பதைத் தெளிவு படுத்த வேண்டும். லடாக் பகுதி யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்படும் போது டார்ஜிலிங் ஏன் அறிவிக்கப்படக் கூடாது?” என உள்ளது.

கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சாவின் முன்னாள் தலைவர் பிமால் கருங்க்,  “மேற்கு வங்க மாநிலத்தின் வடக்கு பகுதியிலும் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது. மத்திய அரசு பாதுகாப்பு அச்சுறுத்தலை முன்னிட்டு லடாக் பகுதியை மத்திய அரசின் கிழ் கொண்டுவர யூனியன் பிரதேசமாக அறிவித்ததாக சொல்கிறது. அதே முறையில் டார்ஜிலிங் பகுதியும் மத்திய அரசின் கீழ் கொண்டு வர யூனியன் பகுதியாக அறிவிக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.