பெங்களூரு
கடந்த மாதம் பெங்களூருவில் நடந்த குடிசை எரிப்பால் 600 புலம்பெயர் தொழிலாளர்கள் வீடிழந்துள்ளதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பெங்களூரு நகரில் சண்டே பஜார் அருகே ஒரு கோவில் நிலம் உள்ளது. இங்கு காலாபுராகியில் இருந்து வந்த சுமார் 600 புலம்பெயர் தொழிலாளர்கள் குடிசை அமைத்து 20 வருடங்களாக வசித்து வந்தனர். இவர்கள் ஊரடங்குக்கு முன் தங்கள் ஊரில் நடந்த திருவிழாவுக்காகச் சொந்த ஊருக்குச் சென்றுள்ளனர் அதன்பிறகு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் அவர்களால் பெங்களூருவுக்குத் திரும்ப முடியவில்லை.
இந்நிலையில் கடந்த மாதம் 27 ஆம் தேதி அன்று இந்தப்பகுதியில் காலியாக இருந்த 130 குடிசைகள் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளன. இதைக் கண்ட ஒரு சமூக சேவகர் தடுத்து நிறுத்தியுள்ளார். ஆயினும் வந்தவர்கள் அதைக் கருத்தில் கொள்ளவில்லை. உடனடியாக அங்கிருந்த மற்றவர்கள் ஊருக்குச் சென்றவர்களுக்கு தகவல் அளித்துள்ளனர். ஆனால் அவர்களால் ஊரடங்கு காரணமாக வர முடியவில்லை.
தற்போது ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டதால் பெங்களூருவுக்கு திரும்பி வந்துள்ள தொழிலாளர்கள் குடிசைகள் தீயினால் முழுவதுமாக நாசமானது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த தொழிலாளர்களின் குழந்தைகள் தற்போது பத்தாம் வகுப்புத் தேர்வு எழுத உள்ளனர். அவர்களது புத்தகங்கள், நோட்டுக்களும் எரிந்து சாம்பலாகி உள்ளன. ஊருக்குச் செல்லும் போது மாணவர்கள் ஹால் டிக்கட்டுகளை எடுத்துச் சென்றதால் அது மட்டும் பாழாகவில்லை.
இது குறித்து சமூக ஊழியர்கள் இந்த மாணவர்களுக்கு புதிய பாடப்புத்தகங்கள் வழங்குமாறு வட்டார கல்வி அதிகரிக்கும் மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். குழந்தைகள் நல வாரியத் தலைவர் தாம் இதுகுறித்து மாணவர்களை சந்தித்து ஆறுதல் கூறி உள்ளதாகவும் விரைவில் அவர்களது குறைகள் களையப்படும் என உறுதி அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.