மருத்துவரின் உயிரை குடித்த வலைத்தள பதிவு.. டாக்டர்கள் போர்க்கோலம்..
கேரளாவில், சமூக வலைத்தள பதிவு, டாக்டர் ஒருவரின் தற்கொலைக்குக் காரணமாக அமைந்த நிகழ்வு, அங்குள்ள டாக்டர்களை கொந்தளிக்கச் செய்துள்ளது.
கொல்லத்தில் உள்ள கிளி கொல்லூர் பகுதியில் டாக்டர் அனூப் கிருஷ்ணா சொந்தமாக மருத்துவமனை நடத்தி வருகிறார்.
அவரது மருத்துவமனையில் சில நாட்களுக்கு முன்பு 7 வயது பெண் குழந்தை, கால் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது.
அனூப், இந்த அறுவை சிகிச்சையைச் செய்துள்ளார். அப்போது குழந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் அருகே உள்ள இன்னொரு மருத்துவமனையில் அனுமதித்தனர்.. அங்கு அந்த குழந்தை இறந்து விட்டது.
அனூப்பின் தவறான அறுவை சிகிச்சையால் குழந்தை இறந்து விட்டது எனக் குற்றம் சாட்டி, அவரது மருத்துவமனை முன்பு, குழந்தையின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மேலும், சமூக வலைத்தளங்களில் ஏராளமானோர், அனூப்பை வசை பாடி பதிவிட்டனர்.
‘அநியாயமாக ஒரு குழந்தையைக் கொன்று விட்டாயே?’’ என போனிலும் திட்டியுள்ளனர்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அனூப் தற்கொலை செய்யும் முடிவுக்கு வந்தார்.வீட்டில் தனியாக இருந்த அனூப், தனது கையை அறுத்து, அந்த ரத்தத்தால், குளியலறையில் ‘’ சாரி’’ என்று எழுதி வைத்து விட்டு, மின் விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் கேரள மாநில டாக்டர்களை கொந்தளிக்கச் செய்துள்ளது.
‘’டாக்டர் அனூப்பை தற்கொலைக்குத் தூண்டிய வலைத்தளப்பதிவர்களுக்கு எந்த இழப்பும் இல்லை. ஆனால் அனூப்பை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்துக்கு யார் பதில் சொல்வது?’’ என அந்த மாநில டாக்டர்கள் சங்கம் வினா எழுப்பியுள்ளது.
– பா.பாரதி.