சபரிமலை
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குப் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த வருடம் மண்டல பூஜைக்காகச் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 15 ஆம் தேதி திறக்கப்பட்டது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வரை பக்தர்கள் வருகை மிகவும் குறைவாக இருந்தது. தற்போது பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து தினசரி 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வருகின்றனர்.
இவர்களில் தமிழகம், ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர். வரும் 26 ஆம் தேதி மண்டல பூஜை நடைபெற உள்ளதால் பக்தர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதனால் சபரிமலையில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சபரிமலை சன்னிதானத்தில் நேற்று புதியதாக ஒரு சூப்பிரண்ட் அதிகாரி தலைமையில் மேலும் 350 காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்களைத் தவிர 350 கமாண்டோ வீரர்கள், அதிவேக அதிரடிப்படை காவல்துறையினர் எனப் பலரும் பாதுகாப்புப் பணியில் உள்ளனர்.