சீனா உள்ளிட்ட 20 நாடுகளின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் சரிந்து வருவதாக சமீபத்தில் வெளியான புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

2024 ஆம் ஆண்டில் மிகக் குறைவான கருவுறுதல் விகிதங்களைக் கொண்ட நாடுகளில் சீனா தவிர தென் கொரியா, ஜப்பான், மக்காவு, ஹாங்காங், சிங்கப்பூர், தாய்லாந்து, ஸ்பெயின், போலந்து, பியூடோ ரிக்கா, சிலி ஆகிய நாடுகளும் இடம்பெற்றுள்ளன.

சீனாவில் பல தசாப்தங்களாக குழந்தை பெற்றுக்கொள்ள கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் 2024 ஆம் ஆண்டில், கருவுறுதல் விகிதம் ஒரு பெண்ணுக்கு 1.00 குழந்தைகள் என மதிப்பிடப்பட்டுள்ளது,

இதனால் நூறு ஆண்டுகள் கழித்து சீனாவின் மக்கள் தொகை தற்போதுள்ளதை விட 80 சதவீதம் குறைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

கருவுறுதல் விகிதம் 1.6 ஆக இருந்தால் நூறாண்டில் 50 சதவீத மக்கள் தொகை குறையும் என்றும் கருவுறுதல் விகிதம் 1.2 ஆக இருந்தால் 80 சதவீதம் குறையும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கருவுறுதல் விகிதம் 1.64ஆகவும், சீனா, ஜப்பான், ஸ்பெயின், போலந்து ஆகிய நாடுகளின் கருவுறுதல் விகிதம் 1.2க்கும் கீழாக உள்ளதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது..

தென் கொரியாவின் கருவுறுதல் விகிதம் 0.70ஆக இருப்பதை அடுத்து அங்கு மக்கள் தொகை 96 சதவீதம் சரிவை சந்திக்கும் என்ற அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

தென் கொரியா மட்டுமன்றி மக்காவு, ஹாங்காங், சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய கிழக்காசிய நாடுகளிலும் மக்கள் தொகை பெருமளவு சரிவை சந்திக்கும் என்று கூறப்படுகிறது.

இளம் தலைமுறையினர் இடையே திருமணம் செய்து கொள்ளும் ஆர்வம் குறைந்து வருவதும், குழந்தை பிறக்கும் வயதைக் கடந்து இல்லற வாழ்வில் நாட்டம் கொள்வதாலும் கருவுறும் விகிதம் குறைவதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

ஜப்பானில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் 25 வயது வரை உள்ள எந்த ஒரு ஆணும் பெண்ணும் காதல் குடும்பம் ஆகியவற்றில் அதிக நாட்டம் கொள்ளாமல் பொழுதுபோக்கை மையப்படுத்திய வாழ்க்கையையே அதிகம் விரும்புவதாகக் கூறப்படுகிறது.

அதே நேரத்தில் உலகளாவிய கருவுறுதல் விகிதம் 2.25 ஆக உள்ளதாகவும் நிலையான மக்கள்தொகை அளவை பராமரிக்க கருவுறுதல் விகிதம் 2.1 தேவைப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.