தேஜா கேரா, அரியானா
சிறையில் இருந்து பரோலில் வெளிவந்துள்ள அஜய் சவுதாலா தனது தம்பி அபய் சவுதாலவை சந்தித்தது அரசியல் உலகில் எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கிறது.
கடந்த 1999 முதல் 2005 வரை ஹரியானா மாநில முதல்வராக, இந்திய தேசிய லோக் தளம் கட்சி தலைவர், ஓம் பிரகாஷ் சவுதாலா, பதவி வகித்தார்.. அ[போது, 3,206 இளநிலை ஆசிரியர்களை, பள்ளிகளுக்கு நியமித்ததில் ஊழல் நடந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் ஓம் பிரகாஷ் சவுதாலா மற்றும் அவரது மூத்த மகன், அஜய்க்கு, 10 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டது.
சுமார் 84 வயதாகும், ஓம் பிரகாஷ் சவுதாலாவும், அவரது மகனும் தற்போது சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இதனால் கட்சி பொறுப்பை இளைய மகன், அபய் சவுதாலா ஏற்றார். கட்சியில் அஜய் சவுதாலாவின் குடும்பத்திற்கு அதிகாரம் குறைக்கப்பட்டது. இதையொட்டி கடும் அதிருப்தி அடைந்த அஜய்யின் மனைவியும், சட்டமன்ற உறுப்பினருமான நைனா சவுதாலா, அவரது மகன்கள், துஷ்யந்த் மற்றும் திக் விஜய் ஆகியோர், ‘ஜனநாயக ஜனதா கட்சி’ என்ற புதிய கட்சியைத் துவக்கினர்.
நடந்து முடிந்த அரியானா சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. மொத்தமுள்ள 90 இடங்களில் 40 இடங்களை வென்ற பாஜகவுடன் ஜனநாயக ஜனதா கட்சி கூட்டணி அமைத்தது. 10 இடங்களில் வென்ற அக்கட்சியின் தலைவர் துஷ்யந்த் சவுதாலாவுக்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. இந்த பதவி ஏற்பு விழாவைக் காண அஜய் சவுதாலா பரோலில் வந்துள்ளார்.
அதற்கு அடுத்த நாள் அரியானா மாநிலம் சிர்சா மாவட்டத்தில் உள்ள தேஜா கேரா என்னும் இடத்தில் உள்ள சவுதாலா குடும்ப பண்ணை வீட்டில் அஜய் சவுதாலா மற்றும் அபய் சவுதாலா இருவரும் சந்தித்துள்ளனர் அவர்களுடன் ஓம் பிரகாஷ் ச்வுதலாவின் சகோதரரும் அரியானா மாநில சட்டப்பேரவை உறுப்பினருமான ரஞ்சித் சிங் சவுதாலாவும் உடன் இருந்துள்ளார்.
கட்சிப் பிளவுக்குப் பிறகு இந்த சகோதரர்களின் தாய் மறைவின் போது இருவரும் சந்திக்க நேர்ந்தது. அதன் பிறகு மீண்டும் இருவரும் சந்தித்துள்ளனர். இதனால் இந்த குடும்பத்தில் உள்ள சண்டை தீர்ந்து இருவரும் மீண்டும் இணைய வாய்ப்புள்ளதாக கட்சித் தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 14 ஆண்டுகளாக தனியாகவோ அல்லது கூட்டணியுடனோ ஆட்சியில் பங்கு பெறாத சவுதாலா குடும்பத்தினர் தற்போது மீண்டும் ஆட்சியில் உள்ள நிலையில் இந்த சகோதரர்கள் சந்திப்பு அரசியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.