டில்லி
காஷ்மீர் மாநிலத்தில் விதி எண் 370 ரத்து செய்யப்பட்டதால் கடந்த 4 மாதங்களில் ரூ.17,878 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது
கடந்த ஆகஸ்ட் 5 ம் தேதி, காஷ்மீர் மாநிலத்தில் விதி எண் 370 ஐ ரத்து செய்த மத்திய அரசு மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது. அத்துடன் மாநிலத்தில் முன்னெச்சரிக்கையாகப் பல கட்டுப்பாடுகளை விதித்தது. இணையச் சேவை, தொலைப்பேசி சேவை முடக்கப்பட்டது. அத்துடன் பல அலுவலகங்களும் வர்த்தக நிறுவனங்களும் இயங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மாநிலத்தில் அனைத்து வர்த்தக நடவடிக்கைகள், சுற்றுலாப் பயணிகள் வருகை உள்ளிட்ட அனைத்தும் குறைந்தது.
காஷ்மீரின் மிகப்பெரிய வர்த்தக அமைப்பான சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரீஸ் (கே.சி.சி.ஐ) சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், “காஷ்மீர் மாநிலத்தில் பொருளாதார கணக்கெடுப்பு 2017-18 இன் அடிப்படையில் 2017-18 ஆம் ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மிகவும் குறைந்துள்ளது. இது குறித்த கணக்கீடுகள் 120 நாட்கள் கால அவகாசத்துக்குக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த கால கட்டத்தில் காஷ்மீரின் பொருளாதாரம் ரூ .17,878.18 கோடி இழப்பைச் சந்தித்துள்ளது, ’’ எனக் கூறப்பட்டுள்ளது..
இந்த மாத தொடக்கத்தில், வர்த்தக அமைப்பு 15,000 கோடி ரூபாய் இழப்பை மதிப்பிட்டது, இது ஒரு “பழமைவாத மதிப்பீடு” என்று கூறியது. கே.சி.சி.ஐ தலைவர் ஷேக் ஆஷிக் உசேன் அப்போது இன்னும் விரிவான கணக்கீட்டை விரைவில் வெளியிடும் எனத் தெரிவித்திருந்தார்.
அதன்படி சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் “தற்போதைய கட்டுப்பாடுகள் காரணமாக லட்சக்கணக்கானோருக்குப் பணி இழப்பு ஏற்பட்டுள்ளது; நிதி நிறுவனங்களில் இருந்து கடன் வாங்கியவர்கள் தங்கள் கடன்களைத் திரும்பித் தரும் திறனை இழந்துள்ளனர் பல வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. சில மூடப்படுவதைப் பற்றி யோசித்து வருகின்றன .
அத்துடன் சுற்றுலாத் துறை மிகவும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. குறிப்பாக கைவினைஞர்கள் மற்றும் நெசவாளர்கள் பணியில்லாமல் உள்ளனர் அடுத்த சில நாட்களில் நாங்கள் இந்த முழு விவரங்களை மத்திய அரசுக்கு அளிக்க உள்ளோம்” எனத் தெரிவித்தார்.
ஆனால் இந்த வர்த்தக அமைப்பு மேற்கோள் காட்டிய புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்தப்பட்டவை கிடையாது என்று மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.