டில்லி
பகுஜன் சமாஜ் கட்சியுடனான கூட்டணி தாமதமாக அமைந்ததால் நாங்கள் தோல்வி அடைந்தோம் என சமாஜ்வாதி கட்சி மக்களவை உறுப்பினர் கூறி உள்ளார்.
மக்களவை தேர்தலில் உத்திரப் பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. காங்கிரஸ் மற்றொரு அணியிலும், பாஜக வேறு அணியிலும் போட்டியிட்டதால் அங்கு மும்முனை போட்டி நிலவியது. மாநிலத்தில் அதிக இடங்களில் பாஜக வென்றுள்ளது. இது சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணிக்கு கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
சமாஜ்வாதி கட்சியின் சார்பில் ஐந்து பேர் வென்றுள்ளனர். இந்த தோல்வி குறித்து பேசாமல் இருந்த சமாஜ்வாதி கட்சியினர் தற்போது தங்கள் மவுனத்தை கலைத்துள்ளனர். வெற்றி பெற்றவர்களில் ஒருவரான ஹசன், “எங்கள் இரு கட்சிகளுக்கான கூட்டணி அமைய மிகவும் தாமதமானதால் தொண்டர்களுக்கு சரியான முறையில் தகவல்கள் போய் சேரவில்லை. தோல்விக்கு இந்த தாமதம் முக்கிய காரணமாகும்” என தெரிவித்துள்ளார்.
சம்பல் தொகுதியில் வெற்றி பெற்ற பர்க், “பாடவுன் தொகுதியில் எங்கள் கட்சி தலைவர் அகிலேஷ் யாதவின் உறவினர் தர்மேந்திர யாதவ் போட்டியிட்டார். ஆனால் யாதவ் இன மக்களில் பலர் அவருக்கு வாக்களிக்கவில்லை. பகுஜன் சமாஜ் தொண்டர்களில் அனைத்து பிரிவினரும் வாக்களித்தும் அவரால் வெற்றி பெற முடியவில்லை. இதற்கு வாய்ப்பு கிடைக்காத கட்சியினரின் அதிருப்தி காரணம் ஆகும்” என தெரிவித்துள்ளார்.
இவர்கள் இருவருமே பொதுவாக காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் இணைக்காததற்கு வருத்தம் தெரிவித்துள்ளனர். காங்கிரசின் வாக்குகளும் கிடைத்திருந்தால் வெற்றி வாய்ப்பு எளிதாக இருக்கும் எனவும் பல இடங்களில் பாஜகவுக்கு எதிரான வாக்குகளை காங்கிரஸ் பிரித்து விட்டதை தவிர்த்து இருக்கலாம் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.
சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கூட்டணி அடுத்து வரும் சட்டப்பேரவை தேர்தலிலும் தொடரும் என கூறப்படுகிறது. அதே நேரத்தில் மாயாவதி மற்றும் அகிலேஷ் யாதவ் ஆகிய இரு தலைவர்களுமே முதல்வர் பதவியை விரும்புகின்றன்ர் என்பது குறிப்பிடத்தகதாகும்.