பீஜிங்

கொரோனா வைரஸ் தாக்குதலால் சீனாவில் நேற்று ஒரே நாளில் 45 பேர் மரணம் அடைந்ததால் மொத்த எண்ணிக்கை 304 ஆகி உள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது.

சீன நாட்டின் வுகான் நகரில் முதலில் கொரோனா வைரஸ் தாக்குதல் கண்டறியப்பட்டது.   அப்போது இந்த வைரஸ் பாதிப்பு அதிக அளவில் இருக்காது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நாடெங்கும் இந்த வைரஸ் வேகமாகப் பரவியது.   ஆகவே வுகான் நகர் வெளி உலகில் இருந்து தனிமைப்படுத்தப் பட்டது.   ஆயினும் இந்த வைரஸ் வேகமாகப் பரவியது.

இதற்கு முன்பு சீனாவில் தாக்கத்தை ஏற்படுத்திய சார்ஸ் வைரசை விட இந்த வைரஸ் மிகவும் கொடூரமானது என தெரிய வந்துள்ளது.  சார்ஸ் வைரஸ் 167 பேருக்குத் தொற்றி அதன் பிறகு 37 நாட்களில் 5050 பேருக்குப் பரவியது.  ஆனால்  கொரோனா வைரஸ் முதலில் 90 பேருக்கு மெதுவாகப் பரவி அதன் பிறகு 14 நாட்களில் 11000 பேருக்குப் பரவி உள்ளது.

இந்த வைரஸ் தாக்குதலால் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.    சீனா அல்லாத 22 நாடுகளில் இந்த வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது.  குறிப்பாக பிரிட்டன், ஆஸ்திரேலியா,  சிங்கப்பூர், நியுஜிலாந்து உள்ளிட்ட  நாடுகளில் இந்த தாக்குதல் உள்ளது.  இந்தியாவில் கேரள மாநிலத்தில் ஒருவர் இந்த வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறார்.

சீன அரசு வெளியிட்டுள்ள தகவலின்படி இந்த வைரஸ் தாக்குதலால் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருவது தெரிய வந்துள்ளது.   நேற்று ஒரு நாள் மட்டும் இந்த வைரஸால் 45 பேர் மரணம் அடைந்துள்ளதாகத் தெரிவித்த சீன அரசு மொத்தம் மரணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 304ஐ எட்டியதாக அறிவித்துள்ளது..