சென்னை:
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்காக தங்கம் வென்ற 16 வயது வீராங்கனை உட்பட 7 பெண் வீரர்களிடம் பிரிஜ் பூஷன் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக டெல்லி காவல்துறையில் ஏப்ரல் 21ம் தேதி புகார் அளித்தனர்.

ஆனால், இந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. இதையடுத்து மல்யுத்த வீரர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிமன்றம் விசாரணைக்கு வந்த போது, வழக்கு பதிவு செய்வதாக காவல் துறையினர் உறுதி அளித்தனர்.

இந்நிலையில், பாஜக எம்.பி.யும், இந்திய மல்யுத்த சம்மேளன தலைவருமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது டெல்லி காவல் துறை இரண்டு வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.

இந்நிலையில், டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்த அரவிந்த் கெஜ்ரிவால், நம் நாட்டை நேசிப்பவர்கள், அவர்கள் காங்கிரஸ், ஆம் ஆத்மி அல்லது பாஜகவைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் மல்யுத்த வீரர்களின் போராட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.