டெல்லி கிரிக்கெட் சங்க நிர்வாகியாக (1999-2013) அருண் ஜெட்லி இருந்தபோது டெல்லி கிரிக்கெட் மைதானத்தின் புதுப்பிக்கும் பணியைச் செய்ய ஒப்பந்தம் செய்யப் பட்ட கட்டிட கான்டிராக்டரின் முகவரி போலியானது என்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அந்தக் கிழக்கு டெல்லி முகவரியில் ஒரு ஊதுபத்தி தயாரிப்பவரின் முகவரி என்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
அருண் ஜெட்லி நிர்வாகியாக இருந்த போது, லோகேஷ் ஷர்மாவிற்கு கட்டிட கான்டிராக்ட் கொடுத்துள்ளார். தற்பொழுது லோகேஷ் ஷர்மா பெயர் பனாமா லீக்ஸ்- பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், மீண்டும் அருண் ஜெட்லியை ஆம் ஆத்மிக் கட்சி குறிவைத்துள்ளது.
லோகேஷ் ஷர்மாவின் கம்பெனி ஒருக்காலத்தில் ராகுல் திராவிட், முகமது கைப், இர்பான் பதான், யூசுஃப் பதான் போன்ற வீரர்களை நிர்வகித்தது மட்டுமில்லாமல் பல வருடங்களுக்கு முன்பிருந்தே டெல்லி கிரிக்கெட் வாரியத்துடன் ஒப்பந்தம் செய்துக் கொண்டு கார்ப்பரேட் அறைக்குக்கான டிக்கெட்டுகள் விற்பனையில் ஈடுப்பட்டு வருகின்றது. மேலும், டெல்லி மற்றும் மொஹாலி கிரிக்கெட் ஸ்டேடியங்களில் போட்டியின்போது விளம்பரப் பலகையை வைக்கும் உரிமைகளையும் பெரும்பாலும் பெற்று வந்தது.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு ஆம் ஆட்மி கட்சி, இரண்டாம் கட்டமாக, ஐந்து கேள்விகளை அடுக்கியுள்ளது.
அக்கட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கீழ்கண்ட ஐந்து கேள்விகளை எழுப்பிள்ளது.
1. திரு. அருண் ஜெட்லி அவர்களே, எவ்வளவு காலமாகத் தங்களுக்கு டெல்லி கிரிக்கெட் வாரிய ஊழலில் பலனை அனுவித்தவராகக் குற்றம் சாட்டப்படும் திரு. லோகேஷ் ஷர்மாவைத் தெரியும் ?
2. திரு. அருண் ஜெட்லி அவர்களே, திரு. லோகேஷ் ஷர்மா தங்களின் குடும்ப நண்பரா அல்லது தொழிற் கூட்டாளியா ?
3. திரு. லோகேஷ் ஷர்மாவின் நிறுவனங்களில் தங்களின் குடும்ப உறுப்பினர்கள் அல்லது உறவினர்கள் யாராவது வேலை செய்துள்ளார்களா ?
4. திரு. லோகேஷ் ஷர்மாவின் நிறுவனங்களில் தங்களின் குடும்ப உறுப்பினர்கள் அல்லது உறவினர்கள் யாராவது தொழில்ரீதியான தொடர்பு வைத்துள்ளார்களா ?
5. 2006ல் தாங்கள் வெளியிட்ட சொத்து மதிப்பு 23.86 கோடியாகும். 2012 ல் தாங்கள் வெளியிட்ட சொத்து மதிப்பு 120 கோடியாகும். இந்தக் குறுகிய கால இடைவெளியின் ஆறு மடங்குச் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளதன் மர்மம் என்ன. மக்களுக்கு உங்கள் தொழில் ரகசியத்தைத் தெரிவியுங்கள்.
ஆ.ஆ.கட்சியின் அசுதோஷ் கூறும்போது ஆ.ஆ.கட்சி மற்றும் பா.ஜ.க. எம். பி. கீர்த்தி ஆசாத் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளிலிருந்து அருண் ஜெட்லி தன்னை குற்றமற்றவர் என நிருபிக்க வேண்டும் எனக் கூறினார்.
அருண் ஜெட்லி அவதூறு வழக்கு நோட்டிஸ் அனுப்பி திசை திருப்புவதை விட்டு விட்டுக் கேட்கப் படும் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும். அவரது வக்கீல் நோட்டிஸ்களுக்கு பயப்பட மாட்டோம். கண்டிப்பாகச் சட்டப் படி அதனை எதிர்கொள்வோம் எனத் தெரிவித்தார்.