புதுடெல்லி: மிகவும் தரம் தாழ்ந்து, பிரதமர் மோடியின் மீது தனிநபர் தாக்குதலில் ஈடுபடும் மாயாவதி, பொது வாழ்விற்கே தகுதியற்றவர் என நிரூபித்துவிட்டார் என்று அவர் மீது பாய்ந்துள்ளார் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி.
ராஜஸ்தானில், ஆல்வார் பகுதியில் தலித் பெண் ஒருவர் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து, பிரதமர் மோடி, மாயாவதியை “முதலைக் கண்ணீர் வடிக்கிறார்” என்று விமர்சித்தார்.
பதிலுக்கு, தன் மனைவியையே தவிக்க விட்டவர், எப்படி பிற பெண்களை மதிப்பார் என்றும், பாரதீய ஜனதாவில் உள்ள பெண்கள் தம் கணவர்களை மோடிக்கு அருகில் விடவே அஞ்சுகிறார்கள் என்றும் தான் கேள்விப்படுவதாக, மோடியை, மாயாவதி விமர்சிக்க, இப்படியாக இருவருக்குமிடையிலான வார்த்தைப் போர் முற்றியது.
இந்த நிலையில், மோடிக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளார் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி.
“பிரதமர் மீது தனிப்பட்ட மோசமான தாக்குதலை தொடுத்துள்ளார் மாயாவதி. இதன்மூலம் அவர் பொதுவாழ்வுக்கே தகுதியானவர் அல்ல என்பதை நிரூபித்துவிட்டார்” என்று கொந்தளித்துள்ளார் அருண் ஜெட்லி.