டில்லி

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அருண் ஜேட்லி அங்குள்ள நோயாளிகள் மற்றும் அவர்கள் உறவினர்களுக்காக உணவு மற்றும் குடிநீர் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தங்கி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.  இதற்காக அவர் இரு வாரங்கள் எய்ம்ஸ் மருத்துவமனையில் தங்கி உள்ளார்.   நாட்டின் மிகப் பெரிய அரசு மருத்துவமனைகளில் ஒன்றான எய்ம்ஸ் மருத்துவமனையில் நாடெங்கும் உள்ள  பல்வேறு பகுதிகளிலிருந்து நோயாளிகள் வருகின்றனர்.

அவர்களில் பலர் புறநோயாளிகளாக இருப்பதால் அவர்கள் தங்கள் உடன் வந்த உறவினர்களுடன் மருத்துவமனை வளாகத்திலேயே தங்கி விடுகின்றனர்.   அவ்வாறு தங்கும் நோயாளிகளுக்கும் அவர்கள் உறவினர்களுக்கும் உணவு மற்றும் குடிநீர் வசதி சரிவர கிடைப்பதில்லை.   இதைக் கண்ட அமைச்சர் அருண் ஜேட்லி மிகவும் மனம் துயருற்றார்.

அருண் ஜேட்லி தனது துறை அதிகாரிகள் மூலமாக மருத்துவமனை வளாகத்தில் ஆறு வாட்டர் கூலர்கள் அமைத்துள்ளார்.  வெளியூரில் இருந்து வரும் நோயாளிகளுக்காக சிறிய குடிநீர் பாட்டில்கள் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்துள்ளார்.    அத்துடன் இலவச உணவு வழங்கும் திட்டத்தையும் சோதனை ரீதியில் நடத்த உத்தரவிட்டுள்ளார்.

இந்த உணவு மற்றும் குடிநீர் வழங்கும் பணியை அமைச்சரின் மனைவி சங்கீதா நேரடியாக கவனித்து வருகிறார்.   எனவே நோயாளிகளும் அவர்கள் உறவினர்களும் அவருடன் நேரடியாக பேசி வருகின்றனர்.   அத்துடன் அமைச்சரின் உடல்நிலை குறித்து அவரிடம் விசாரிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.