அருள்மிகு விருத்தபுரீஸ்வரர் (பழம்பதிநாதர்) திருக்கோயில், புதுக்கோட்டை மாவட்டம், திருப்புனவாசலில் அமைந்துள்ளது.
“ஓம்” என்ற பிரணவ மந்திரத்திற்கு பொருள் தெரியாமல், செய்த தவறுக்காக பிரம்மா படைக்கும் தொழிலை இழக்க வேண்டியதாயிற்று. பார்வதியின் அறிவுரைப்படி, பூலோகத்தில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து, மீண்டும் தனது தொழிலைப் பெற பூஜை செய்து வந்தார். இலிங்க அபிஷேகத்திற்காக தீர்த்தம் ஒன்றை உருவாக்கினார். பிரம்மன் உருவாக்கிய தீர்த்தம் என்பதால் “பிரம்ம தீர்த்தம்” என்ற பெயர் ஏற்பட்டது. நான்கு முகங்களைக் கொண்டவர் என்பதால், இலிங்கத்தின் நான்கு பகுதிகளிலும் சிவமுகத்தை உருவாக்கினார்.
இது சதுர்முக இலிங்கம் எனப்பட்டது. “சதுர்” என்றால் “நான்கு.” இந்த இலிங்கமே இங்கு வழிபாட்டில் இருந்தது. பிற்காலத்தில், இரண்டாம் சுந்தர பாண்டியன், சோழநாட்டுப் பாணியையும், பாண்டியநாட்டுப் பாணியையும் கலந்து ஒரு கோயிலை எழுப்பினான். சோழர் கோயில்களில், ராஜகோபுரம் சிறிதாகவும், விமானம் உயரமாகவும் இருக்கும். பாண்டியர் கோயில்களில் இதற்கு நேர்மாறாக இருக்கும். இது கலப்படக் கோயில் என்பதால், ராஜகோபுரமும், விமானமும் மிக உயரமாக அமைக்கப்பட்டது.
மூலஸ்தானத்தில் பிரம்மாண்டமான ஆவுடையாருடன் கூடிய இலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இவரை “விருத்தபுரீஸ்வரர்” என அழைத்தனர். “விருத்தம்” என்றால் “பழமை.” இவர் “பழம்பதிநாதர்” என்றும் அழைக்கப்படுகிறார். பிரம்மாவே வணங்கிய தலம் என்பதால், இது மிகப்பழமையான ஊராகக் கருதப்படுகிறது.
எந்த ஊர் லிங்கம் பெரியது எனக்கேட்டால், பெரும்பாலானவர்கள் “தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில் (பெரிய கோயில்) இலிங்கம்” என்று தான் சொல்வார்கள். உண்மையில், தஞ்சாவூர் கோயிலைக் கட்டிய இராஜராஜ சோழனை விட, அவரது மகன் இராஜேந்திர சோழன் கட்டிய கங்கைகொண்டசோழபுரத்தின் இலிங்கமே உயரத்தில் பெரியது. தஞ்சை கோயில் லிங்கம் 12.5 அடி உயரமும், 55 அடி சுற்றளவும் (ஆவுடையார்) கொண்டது. கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் இலிங்கம் 13.5 அடி உயரமும், 60 அடி சுற்றளவும் கொண்டது. திருப்புனவாசல் கோயிலில் இலிங்கம் 9 அடி உயரமே உடையதென்றாலும், ஆவுடையார் 82.5 அடி சுற்றளவு கொண்டதாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இது தஞ்சை மற்றும் கங்கைகொண்டசோழபுரத்தை விடப் பெரியது. இதனால், ஆவுடையாருக்கு ஆடை அணிவிக்கும் போது, ஒருவர் பிடித்துக் கொள்ள இன்னொருவர் ஆவுடையாரை சுற்றி வந்து கட்டி விடுவார்.
இலிங்கத்திற்கு 3 முழமும், ஆவுடைக்கு 30 முழமும் வேட்டி கட்டப்படுகிறது. இதை வைத்துதான் “மூன்று முழமும் ஒரு சுற்று, முப்பது முழமும் ஒரு சுற்று” என்ற வட்டாரமொழி இப்பகுதியில் சொல்லப்படுகிறது. இங்கே முழம் என்பது “தச்சுமுழம்” கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஒரு தச்சுமுழம் என்பது 2.75 அடி. அப்படியானால் 82.5 அடி நீளமுள்ள வேட்டி கட்ட வேண்டும். இதை உத்தேசமாக 90 அடிக்கு நெய்து விடுகிறார்கள். இந்த வேட்டியை பக்தர்கள், ஸ்பெஷல் ஆர்டர் கொடுத்து நெய்து காணிக்கையாகச் செலுத்துகிறார்கள். சிவனுக்கு அபிஷேகம் செய்வதற்காக ஆவுடையை சுற்றி பலகை கட்டியிருக்கிறார்கள். இதன் மீது ஏறிநின்று அபிஷேகம் செய்கின்றனர்.
கோயில்களில் ஒன்று அல்லது இரண்டு தலவிருட்சங்கள் இருக்கும். இத்தலம் நான்கு யுகத்திலும் நான்கு பெயர்களுடன் இருந்ததாகக் கருதப்படுகிறது. எனவே, நான்கு தலவிருட்சங்கள் உள்ளன. எல்லோராலும் ஒதுக்கப்படும் கள்ளியும் இங்கு தல விருட்சமாக உள்ளது என்பதில் இருந்து, இறைவன் வெறுக்கக்கூடியவற்றையும் ஆட்கொள்பவர் என்பது வெளிப்படுகிறது. கிருதயுகத்தில் வஜ்ரவனம், இந்திரபுரம் என்ற பெயருடன் சதுர கள்ளியையும், திரேதாயுகத்தில் பிரம்மபுரம் என்ற பெயருடன் குருந்தமரத்தையும், துவாபரயுகத்தில் விருத்தகாசி என்ற பெயருடன் மகிழ மரத்தையும், கலியுகத்தில் பழம்பதி என்ற பெயருடன் புன்னை மரத்தையும் தலவிருட்சமாக கொண்டுள்ளது. இவை நான்கும் நான்கு வேதங்களாக வணங்கப்படுகின்றன. சதுரகள்ளி வனமாக இருந்த இப்பகுதியில், கார்கவ முனிவர் தவம் செய்து வந்தார். அசுரன் ஒருவன் புலிரூபம் எடுத்து இவரைக் கொல்ல முயன்றான். கோபமடைந்த முனிவர் அவனை எப்போதும் புலியாகவே இருக்கும்படி சபித்தார். ஒருமுறை பார்வதி மானிட வடிவில் இப்பகுதிக்கு வரும்போது, புலிவடிவில் இருந்த அரக்கன் பார்வதி மீது பாய்ந்தான். கோபமடைந்த அம்பாள், காளியாக மாறி புலியை எட்டி உதைத்தாள். தாயின் திருவடி பட்டதோ இல்லையோ அவன் சுயரூபம் பெற்றான். அவனது அசுரகுணங்களும் ஒழிந்து விட்டன. “அன்னையே! நான் எப்போதும் உங்கள் அருகில் இருக்கும் வரம் தர வேண்டும்” என்றான். அதன்படி அசுரன் இத்தலத்தில் பெரியநாயகி அம்மனின் எதிரே நந்தி வடிவில் அமர்ந்து விட்டான். எனவே இத்தலத்து நந்தி “வியாக்ர நந்தி” எனப்படுகிறது.
“வியாக்ரம்” என்றால் “புலி.” அம்மன் காளியாக மாறியவுடன், பெரியநாயகி சன்னதி எதிரே உள்ள மொட்டைக்கோபுர நுழைவு வாயிலில், ஊர் காவல் தெய்வமாக அமர்ந்து விட்டாள். அவள் மிகவும் உக்கிரமாக இருந்ததால், ஊரில் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டது. எனவே, அவள் இருக்கும் நடையை பூட்டி விட்டனர். அவளுக்கு உருவம் கிடையாது. ஒரு கண்ணாடியில் காளிக்குரிய சூலத்தை மட்டும் தரிசிக்கலாம். காளியம்மனுக்கு பயந்து கோயில் குத்தகைதாரர்கள் பணத்தை இன்று வரை ஒழுங்காக கட்டி விடுகின்றனர். யாராவது கட்டாவிட்டால், அவர்கள் வீட்டில் கொடிய சம்பவங்கள் நிகழ்கிறது என்பதால் பயத்திலேயே கட்டி விடுகிறார்கள். மேலும், கோயில் வாசலைக் கடக்கும் போது, ஊர்மக்கள் தங்கள் காலணிகளை கழற்றி கையில் வைத்துக்கொண்டு பணிவாகச் செல்கின்றனர்.
முனிவர் ஒருவரின் சாபத்தினால் அங்காரனாகிய செவ்வாய் பகவான், தனது சக்தியை இழந்தான். நாரதரின் அறிவுரைப்படி இத்தலம் வந்து பிரம்ம தீர்த்தத்தில் நீராடி, சிவனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு சக்தி பெற்றான்.
சிவபெருமான் நடராஜராக திருவாலங்காடு இரத்னசபை, சிதம்பரம் கனக சபை, மதுரை இரஜதசபை, திருநெல்வேலி தாமிர சபை, குற்றாலம் சித்திர சபை ஆகியவற்றில் நடனமாடுகிறார்.
திருப்புனவாசலில் நடராஜர் வீற்றிருக்கும் சபை “சிவஞானசபை” எனப்படுகிறது. இந்த சபையில், அகத்தியருக்காக சிவபெருமான் நடனக்காட்சி தந்தருளினார். கோயில் மேற்கு பிரகாரத்தில் குருந்த மரத்தின் அடியில் அகத்தியர் பூஜித்த இலிங்கம் உள்ளது. திங்கள் கிழமைகளில் மட்டுமே இந்த இலிங்கத்திற்கு பூஜை செய்யப்படும். மற்ற கிழமைகளில் இவர் மோன நிலையில் இருப்பதால் “மோன நிலை முனீஸ்வரர்” என அழைக்கப்படுகிறார்.