சென்னை: சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன திருவிழா  இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை காண நூற்றுக்கணக்கான பக்தர்கள்  குழுமிய நிலையில், பக்தர்களின் பரவசதினுடே கோயில் கொடி மரத்தில் தீட்சிதர்கள் கொடியேற்றனர்.

புகழ்பெற்ற சிதம்பரம் நடரா4ர் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் ஆனித்திரு மஞ்சன தரிசனமும்  சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, ஆருத்ரா தரிசனம் திருவிழா தொடங்கி உள்ளது.  காலை 6:15 மணி முதல் 7:00 மணிக்குள் கொடியேற்றப்பட்டது. இதை பல ஆயிரம் பக்தர்கள் கண்டு களித்து நடராஜரின் அருள் பெற்றனர்.

இதைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடக்கிறது.  இதனையத்து நாளை சந்திர பிரபை வாகன வீதியுலா, 6-ந் தேதி தங்க சூரிய பிரபை வாகனத்தில் வீதியுலா, 7-ந் தேதி வெள்ளி பூத வாகனத்தில் வீதி உலா ஆகியன நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வுகள், ஜனவரி 11ம் தேதி  முதல் தொடங்குகிறது.  அன்றைய தினம்,  தங்க ரதத்தில் பிஷாடன மூர்த்தி வீதியுலா நடக்கிறது. ஜனவரி  12ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. அன்றைய தினம் காலை 5:00 மணிக்கு நடராஜர், அம்பாள், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் தனித்தனி தேரில் எழுந்தருளி வீதியுலா வருவர். இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெறுகிறது.

இதையடுத்து ஆரூத்ரா தரிசனம் நிகழ்ச்சி, ஜனவரி 13ம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம்  அதிகாலை 2:00 மணி முதல் 6:00 வரை, ஆயிரங்கால் மண்டப முகப்பில் சிவகாம சுந்தரி சமேத நடராஜருக்கு மகாபிஷேகம் நடக்கிறது.  தொடர்ந்து திருவாபரண அலங்காரம், பஞ்ச மூர்த்தி வீதி உலா காட்சியும், சித்சபையில் விஷேக ரகசிய பூஜையும் நடைபெறும். மதியம் 2 மணிக்கு ஆருத்ரா தரிசனமும், ஞான காச சித்சபை பிரவேசமும் நடைபெறும்.  பின்னர், மாலை 3:00 மணிக்கு மேல், நடராஜரும், அம்பாளும் ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து நடனமாடியபடி பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் தரிசன விழா நடக்கிறது.

தொடர்ந்து 14-ந் தேதி பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதியுலா, 15-ந் தேதி தெப்போற்சவத்துடன் உற்சவம் நிறைவடைகிறது.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் பொது தீட்சிதர்கள் குழு செயலர் வெங்கடேச தீட்சிதர், துணைச்செயலர் சுந்தரதாண்டவ தீட்சிதர், உற்சவ ஆச்சாரியர் சிவராஜ தீட்சிதர் ஆகியோர் செய்து வருகின்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில் சிதம்பரம் டி.எஸ்.பி. லாமேக் தலைமையில் சுமார் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை சிதம்பரம் நகராட்சி சேர்மன் செந்தில்குமார் உத்தரவின் பேரில் நகராட்சி அதிகாரிகள் செய்து  வருகின்றனர்.

 

சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசனம்: ஜனவரி 13ந்தேதி கடலூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு…