டில்லி
காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் விதி எண் 370 ஐ அரசு நீக்கம் செய்தது மிகப் பெரிய தவறு என முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பு சட்டத்தின் விதி எண் 370 மற்றும் 35ஏ ஆகிய பிரிவுகள் காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கியது. மற்ற மாநிலங்களுக்கு இல்லாத பல சலுகைகள் காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்தன. பாஜக அரசின் உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று இந்த இரு விதிகளையும் விலக்கிக் கொள்வதாக மக்களவையில் அறிவித்தார். இந்த நீக்கத்துக்கு குடியரசுத் தலைவர் உடனடியாக ஒப்புதல் அளித்தார். இது எதிர்க்கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து மாநிலங்களவையில் முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப சிதம்பரம், “விதி எண் 370 ஐ நீக்கியது இந்திய சரித்திரத்தில் ஒரு கருமையான நாள் ஆகி உள்ளது. தற்போது நீங்கள் இந்த வெற்றியைப் பெற்றுள்ளீர்கள். இதை முரசு அடித்துக் கொண்டாடினாலும் நீங்கள் செய்தது அநீதி எனச் சரித்திரம் உங்களுக்கு நிரூபிக்கும். நீங்கள் இந்த அவையில் செய்த இமாலயத் தவறால் வருங்கால சந்ததியினர் பாதிப்பு அடைவார்கள்.
நீங்கள் எடுத்துள்ள இந்த முடிவு நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் தவறான முன்னுதாரணத்தை அளித்துள்ளது. இங்கு அமர்ந்திருக்கும் நாங்கள் நீங்கள் சொல்வதைக் கேட்போம், உங்களுக்கு எதிராக வாக்களிப்போம். விதி எண் 370 ஐ அதே விதி எண் 370 ஐக் கொண்டு எவ்வாறு மாற்ற முடியும்? உங்கள் தேர்தல் வாக்குறுதியில் இதை நீங்கள் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளதை நான் அறிவேன். ஆனால் நீங்கள் இந்த விதியை நீக்குவதன் மூலம் மிகப் பெரிய தவறு இழைத்து விட்டீர்கள். அதன் விளைவை உங்களால் கட்டுப்படுத்த முடியாது.
கல்லெறி போராட்டக்காரர்கள் குறித்து அரசு தெரிவிக்கும் போது அவர்கள் கல்லெறி போராட்டத்துக்கான காரணம் அவர்களுக்குச் சரியாக இருக்கலாம் என்பதை நினைவு கொள்ள வேண்டும். இது போல் மற்ற மாநிலங்களுக்கும் நடக்காது என்பதற்கு என்பதை மறுக்க முடியுமா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கலைத்து விட்டு அனைத்து அதிகாரங்களையும் இனி பாராளுமன்றம் எடுக்கவும் முடியும். மத்திய அரசு தன்னை எதிர்க்கும் ஒரிசா, மேற்கு வங்கம் மற்றும் தமிழகம் போன்ற மாநிலங்களிலும் இது போல் நடந்துக் கொள்ளும்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து ப சிதம்பரம் ஒரு செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “ஒரு தீர்மானத்தை காலையில் கொண்டு வந்து விட்டு ஒரு சில மணி நேரங்களில் அதற்கு ஜனாதிபதி ஒப்புதலும் பெறுவது சரித்திரத்தில் முதல் முறையாகும். யூனியன் பிரதேசங்களான புதுச்சேரி, டில்லி போன்றவை மாநில அந்தஸ்து கோருகின்றன. கோவாவுக்கு மாநில அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் மாநிலமாக இருந்த காஷ்மீர் தற்போது யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் டில்லி மற்றும் புதுச்சேரியில் முதல்வரை விடத் துணை நிலை ஆளுநர் அதிக அதிகாரம் உள்ளவராக இருக்கும் நிலை இங்கும் உண்டகும். இது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகும்.” எனத் தெரிவித்துள்ளார்.