நாக்பூர்:,

மாட்டுக்கறி கொண்டு சென்றதாக, பசு பாதுகாவலர்களால் கடுமையான தாக்குதலுக்கு ஆளான பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த இஸ்லாமிய நபரை கைது செய்துள்ளது மகராஷ்டிரா காவல்துறை.

இது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகே கடோல் தாலுகா பாஜ சிறுபான்மை பிரிவு தலைவராக இருந்து வருபவர்  லீம் இஸ்மாயில் ஷா. சம்பவத்தன்று தனது  ஸ்கூட்டரில் 15 கிலோ இறைச்சியை வீட்டிற்கு எடுத்துச் சென்றார்.  அப்வபோது அவரை  பாராசிங்கி  ஜலல்கேதா பகுதியில் வழிமறித்த  4 பசு பாதுகாவலர்கள் அவரை சரமாரியாக தாக்கினர்.

இதில் பலத்த காயமடைந்த இஸ்மாயில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையடுத்து காவல்துறையில் மேற்கொண்ட  விசாரணையில் அவரை தாக்கியவர்கள சுயேட்சை எம்.எல்.ஏ ஆதரவாளர்கள் என்பது தெரிய வந்தது.

.இந்த சம்பவத்திற்கு பாஜ கடும் கண்டனம் தெரிவித்தது. அவருக்கு ஆதரவாக அக்கட்சியினர் போராட்டத்திலும்  ஈடுபட்டனர்.

அதைத்தொடர்ந்து  அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட இறைச்சி பரிசோனைக்காக ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில், அவர் எடுத்துச்சென்றது மாட்டு இறைச்சி என்பது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து, மாட்டிறைச்சி வைத்திருந்தால் ஒருவருடம் சிறை என்ற சட்டப்படி அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்த நாக்பூர் எஸ்.பி. சைலேஷ் பல்காவதே கூறுகையில்,‘ மாட்டு இறைச்சி வைத்தி ருந்தால் ஒரு ஆண்டு வரை சிறையும், அபராதமும் விதிக்கும் சட்டத்தின்படி அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சி நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும்’’ என்றார்.

ஆய்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து அவரை கட்சியில் இருந்து நீக்கி பாஜ நாக்பூர் மாவட்ட தலைவர் ராஜிவ் போட்தர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

பசு பாதுகாவலர்களால் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட தனது கட்சி நிர்வாகிக்கு ஆதரவு கொடுக்காமல், கட்சியில் இருந்து கழற்றி விட்டு தனது மாட்டுக்கறி விசுவாசத்தை காட்டியுள்ளது பாரதியஜனதா கட்சி.

ஆனால், பாரதியஜனதா பிரதமரான மோடியோ, பசு பாதுகாவலர்கள் என்ற போர்வையில் சட்டத்த மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் இன்றுகூட கூறியுள்ள நிலையில்,

மகாராஷ்டிரா  மாநில பாரதியஜனதா அரசும், கட்சியினரும், தாக்கியவர்கள்மீது நடவடிக்கை எடுக்காமல், தாக்குதலுக்கு ஆளான நபர்மீதே வழக்கு பதிவு செய்து கைது செய்திருப்பது அரசின் அராஜகத்தை காட்டுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.