மும்பை:
மும்பையில் கைது செய்யபப்பட்ட அர்னாப் கோஸ்வாமியை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
52 வயதான நபரை தற்கொலைக்கு தூண்டியதாக, 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடரப்பட்ட வழக்கில், ‛ரிபப்ளிக் டிவி’ ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். அப்போது, தன்னை வலுக்கட்டாயமாக இழுத்து சென்றதாகவும், அர்னாப் புகார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக போலீஸ் உயரதிகாரிகள் கூறுகையில், கடந்த 2018 ம் ஆண்டு ‛ரிபப்ளிக் டிவி’ நிறுவனம் தர வேண்டிய நிலுவை தொகை கிடைக்கவில்லை எனக்கூறி, 53 வயதான இன்டீரியர் டிசைனரான அன்வய் நாயக் மற்றும் அவரது தாயார் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அர்னாப் கோஸ்வாமியை, அவரது வீட்டில் வைத்து போலீசார் கைது செய்ததாக, தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கை அலிபாக் போலீசார் சரியாக விசாரணை நடத்தவில்லை எனக்கூறி, அன்வய் நாயக்கின் மகள் போலீஸ் உயரதிகாரிகளுக்கு புகார் அளித்ததாகவும், இதனால் இந்த வழக்கில் மறு விசாரணை நடத்தப்படும் என மஹாராஷ்டிரா மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஸ்முக் தெரிவித்திருந்தார்.
இதனிடையே தன்னை மும்பை போலீசார் தாக்கியதாகவும், வலுக்கட்டாயமாக இழுத்து சென்றதாகவும் அர்னாப் கோஸ்வாமி புகார் தெரிவித்துள்ளார். தனது மனைவி, மகன், மாமனார், மாமியார் ஆகியோரையும் போலீசார் தாக்கியதாக அர்னாப் கோஸ்வாமி தெரிவித்துள்ளார். இது குறித்த காட்சிகளை, ‛ரிபப்ளிக் டிவி’ ஒளிபரப்பியது.
இந்நிலையில், அர்னாப் கோஸ்வாமியை 14 நாட்கள், அதாவது வரும் 18ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.