ஜம்மு காஷ்மீர் மாநிலம் புட்காம் மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் ஒருவரை தீவிரவாதிகள் அவரது வீட்டில் இருந்து கடத்தி சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஜம்மு காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
கடந்த மாதம் 14ம் தேதி புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் இந்திய சிஆர்பிஎஃப் வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர். அதாஇ தொடர்ந்து பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் இயங்கும் பால்கோட் பகுதியில் உள்ள தீவிரவாதிகள் முகாம் மீது இந்திய விமானப்படை துல்லியத் தாக்குதல் நடத்தியது. இதில் இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைப்பிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.
இதனால இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இது ஒருபுறம் இருக்க பாகிஸ்தான் ராணுவம், தீவிரவாதிகளும் அவ்வபோது எல்லையில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. நேற்று ஜம்மு பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட பேருந்தில் வெடிகுண்டு வெடித்ததில் 18பேர் காயமடைந்தனர். இதற்கிடையே 4 நாட்களுக்குள் இந்தியாவில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் புட்காம் மாவட்டத்தின் காலாட்படையை சேர்ந்த ராணுவ வீரர் கடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. புட்காம் மாவட்டத்தில் உள்ள குவாஜிபுரா பகுதியில் வசித்து வந்த ராணுவ வீரர் முகமது யாசின் என்பவரை அவரது வீட்டிற்குள் நுழைந்த தீவிரவாதிகள கடத்தி சென்று விட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணுவ வீரர் யாசின் கடந்த பிப்ரவரி 26ம் தேதி முதல் மார்ச் மாதம் வரை விடுப்பில் உள்ளார். இதனிடையே அவரை தீவிரவாதிகள் கடத்தி சென்றுள்ளனர்.
இது குறித்து தகவலறிந்த இந்திய ராணுவ வீரர்கள் முகமது யாசினை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஜம்மு காஷ்மீர் பகுதியில் மேலும் பதற்றம் நீடித்து வருகிறது.