பாட்னா
காதலியை மணக்க மறுத்த ராணுவ வீரருக்கு போலீஸ் அதிகாரி காவல் நிலையத்தில் திருமணம் செய்து வைத்தார்,
பாட்னாவில் உள்ள 21 வயதான ராணுவ வீரர் ரஞ்சன்குமார், பீகார் ரெஜிமெண்டில் பணி புரிகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த குடியா என்னும் இளம்பெண்ணை கடந்த ஒரு வருடமாக காதல் புரிந்து வந்தார். இருவரும் வீட்டுக்குத் தெரியாமல் அடிக்கடி சந்தித்து வந்தனர்.
சம்பவத்தன்று இரவு, குடியாவின் வீட்டில் யாரும் இல்லாததால் இருவரும் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். எதிர்பாராத விதமாக குடியாவின் வீட்டினர் திரும்பி வந்து விட்டனர். இருவரையும் ஒன்றாக கண்ட வீட்டினர். ரஞ்சன்குமாரை வற்புறுத்தி திருமணம் செய்துக் கொள்ள சொல்லி உள்ளனர். அவர் மறுக்கவே, இருவரையும் தனாப்பூர் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். ரஞ்சனின் மேல் வழக்கு பதிய முடிவெடுக்கப்பட்டது.
அங்கு வந்த ரஞ்சனின் தாய்மாமன் ரஞ்சன் மேல் வழக்கு பதிந்தால் அவர் தற்கொலை செய்துக்கொள்ளுவார் எனவும் அவரது குடும்பத்தாரை அழைத்து பேசலாம் எனவும் கூறினார். அதன்படி இரு குடும்பத்தாருக்கும், இடையில் நடந்த பேச்சு வார்த்தையில் திருமணம் நடத்த முடிவாயிற்று.
காவல் நிலையமே கல்யாண மண்டபம் ஆனது. உடனடியாக இருவருக்கும் உடைகள் தயார் செய்யப்பட்டன. குழுமி இருந்த பெண்கள் வடநாட்டு முறைப்படி திருமணப் பாடல்களை இசைக்கத் தொடங்கினர். மாலை மாற்றி, காவல் அதிகாரி தலைமையில் தாலி கட்டி குடியாவை மனைவியாக்கிக் கொண்டார் ரஞ்சன். இரு தரப்பிலும் இனிப்புகள் தரப்பட்டு திருமணம் இனிதே முடிந்தது.