திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலியானவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. இதைத் தொடர்ந்து, மீட்பு பணியில் 225 ராணுவ வீரர்கள் ஈடுபட்டு உள்ளனர். விமானப்படை ஹெலிகாப்டர்களும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.
வயநாடு நிலச்சரிவு மீட்பு பணிகள் மற்றும் அதன் தொடர்புடைய நடவடிக்கைகளுக்காக ராணுவத்தின் பொறியியல் குழுவும் கேரளாவிற்கு விரைகிறது. இந்திய ராணுவத்தின் மெட்ராஸ் சேப்பர்ஸ் பிரிவு (MEG) பெங்களூரில் இருந்து வருகின்றனர். மண்சரிவில் பாலம் இடிந்து விழுந்த இடத்தில் ராணுவ பொறியியல் துறை ஆய்வு மேற்கொள்கிறது என மாநில முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக, வயநாடு மாவட்டத்தில் நேற்று இரவு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. மேலும் முக்கிய பாலமும் நிலச்சரிவில் சிக்சி உடைந்து விழுந்தது. இதனால் அந்த பகுதி மக்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். நேற்று இரவு மட்டும் , 4 மணி நேரத்தில் அடுத்தடுத்து முண்டக்கை, மெப்பாடி உள்ளிட்ட 3 இடங்களில் கடுமையான 3 நிலச்சரிவு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர், காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தொடர்ந்து மழையும் பெய்து வருவதால் மீட்புபணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், மீட்பு பணிக்கு ராணுவத்தின் உதவி கோரப்பட்டது. இதையடுத்து, காலாட்படை பட்டாலியனைச் சேர்ந்த 225 பேர் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். குன்னூர் கண்டோன்மென்டில் இருந்தும் இரண்டு குழுவினர் வயநாடு விரைந்து உள்ளனர். மேலும் விமானப்படைக்கு சொந்தமான ஏஎல்எச் மற்றும் எம்ஐஐ 7 ஹெலிகாப்டர்களும், சாரங் வகை ஹெலிகாப்டர்களும் மீட்பு பணியில் முன்னின்று உதவி வருகின்றன.
மருத்துவ அதிகாரிகள் குழு தலைமையில், 40 பேர் அடங்கிய குழவினர் மீட்பு பணிக்கு உதவுவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது.