சென்னையில் நேற்று முன்தினம் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலை திருவள்ளூரில் அடக்கம் செய்ய தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆம்ஸ்ட்ராங் உடலை பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அவரது மனைவி தரப்பில் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி பவானி சுப்பராயன் அவரது உடலை திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தை அடுத்த பொத்தூரில் அடக்கம் செய்ய அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

முன்னதாக தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடலை அவரது கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய மாநகராட்சி அனுமதி அளித்ததை சுட்டிக்காட்டி அதுபோல் ஆம்ஸ்ட்ராங் உடலும் அவரது கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனால், விஜயகாந்த் கட்சி அலுவலகம் 27,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது என்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில அலுவலகம் மக்கள் நெருக்கடி மிகுந்த குறுகிய இடத்தில் சிறிய பரப்பளவில் உள்ளதை அரசு தரப்பு சுட்டிக்காட்டியது.

இதையடுத்து எதிர்காலத்தில் ஹத்ராஸ் சம்பவம் போன்று கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க போதுமான இடவசதியுள்ள இடத்தில் ஆம்ஸ்ட்ராங் உடல் கண்ணியத்துடன் அடக்கம் செய்ய அரசுத் தரப்பை நீதிபதி வலியுறுத்தினார்.

பெரம்பூரில் 200 சதுர அடி கொண்ட இடத்தை ஒதுக்க அரசு முன்வந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் தரப்பில் மணிமண்டபம் கட்ட போதுமான இடம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே உள்ள பொத்தூரில் அவரது உடலை அடக்க செய்துகொள்ள அனுமதி கோரப்பட்ட நிலையில் இதற்கு அரசு ஒப்புதல் அளித்தள்ளதோடு உரிய அனுமதியுடன் மணிமண்டம் கட்ட்டிக்கொள்ளலாம் என்று கூறியுள்ளது.

மேலும், பொதுமக்கள் அஞ்சலிக்காக தற்போது மாநகராட்சி பள்ளி வளாக மைதானத்தில் ஆம்ஸ்ட்ராங் உடல் வைக்கப்பட்டுள்ள நிலையில் நாளை பள்ளியை திறக்க தேவையான வகையில் அவரது உடல் அடக்கம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நீதிபதி அறிவுறுத்தினார்.

இதையடுத்து இன்று மாலை 4 மணிக்கு பெரம்பூரில் இருந்து அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு திருவள்ளூரில் அடக்கம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

தவிர, ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அரசு மரியாதை தரப்பட வேண்டும் என்ற அவரது மனைவியின் கோரிக்கை குறித்து அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் இதுகுறித்து நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.