சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் திமுக நிர்வாகியின் மகளை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். இவரது தந்தை குமரேசன், திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக இலக்கிய அணி துணை அமைப்பாளராக பொறுப்பு வகித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆக யர்ந்துள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட கும்பலால் படுகொலை செய்யப் பட்டார். இந்த படுகொலையை செய்த குற்றவாளிகள் அடுத்த சில மணி நேரத்தில் அண்ணாநகர் காவல்துறையில் சரண் அடைந்தனர்.
இந்த கொலை வழக்கை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை ரௌடி ஆர்க்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன, கோகுல், சக்தி, சந்தோஷ், அருள், சிவசக்தி உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே காவலர்களை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றதாகக் கூறி கடந்த ஞாயிற்றுக் கிழமை (14ந்தேதி) திருவேங்கடம் என்ற முக்கிய குற்றவாளி என்கவுண்டர் செய்யப்பட்டார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. கொலை வழக்கை மூடி மறைக்கவே இந்த என்கவுண்டர் என்று விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக பிரபல தாதாவின் மனைவியும், வழக்கறிஞருமான மலர்கொடி மற்றும் ஹரிஹரன் ஆகியோரை செம்பியம் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 6 நபர்களிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அதைத்தொடர்ந்து, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக சதீஷ் என்பவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சதிஷ் என்பவரின் தந்தை பெயர் குமரேசன், திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக இலக்கிய அணி துணை அமைப்பாளராக பொறுப்பு வகித்து வருகிறார். இதனால் இந்த விவகாரம் மேலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி உள்ள அருள் என்பவருடன் பேசியது தெரியவந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். மேலும் கைது செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர் மலர்கொடி மூலம் பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாகவும் சந்தேகம் எழுந்துள்ளது. இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுதவிர ஆற்காடு சுரேசுக்கு நெருக்கமான பாஜக நிர்வாகி அஞ்சலைக்கும் கொலையில் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர் .
இந்த நிலையில், இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பொன்னை பாலு, அருள் மற்றும் திருமலை ஆகிய 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்த விசாரணையின் போது இவர்களை ஏவியது யார்? என்ற தகவல் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வழக்கில் ஏற்கனவே 13 பேர் கைதான நிலையில் சதீசுடன் சேர்த்து போலீசில் சிக்கியவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. இதனால் ஆம்ஸ்ட்ராங் கொலை அரசியல் கொலையாக மாறி உள்ளது.