சென்னை: பிஎஸ்பி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்த கொலை சம்பந்தமாக கைது செய்யப்பட்ட வர்களின் சொத்துக்களை முடக்க காவல்துறை நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
கடந்த ஜூலை 5ஆம் தேதி தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவருடைய வீடு இருக்கும் பெரம்பூர் வேணுகோபால் சாமி தெருவில் பட்டப்பகலில் 6 பேர் கொண்ட கும்பலால் சரமாரியாக வெட்டி, கொல்லப்பட்டார். ஆம்ஸ்ட்ராங்கின் தலை, கணுக்கால்களில் வெட்டினால் ரத்தம் அதிகம் வெளியேறி அவரால் தப்பிக்க முடியாது என்பதற்காக ரவுடிகள் அவரை ரத்த நாளங்கள் இருக்கும் நரம்புகளில் வெட்டி கொலை செய்தனர். இந்த படுகொலை சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த கொலை சம்பவத்திற்கு, கடந்த ஆண்டு பட்டினம்பாக்கத்தில் வெட்டிக் கொல்லப்பட்ட ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில் ஆம்ஸ்ட்ராங்கிற்கு தொடர்பு இருப்பதாக கூறப்படு கிறது. ஆனால், புதிதாக பிஎஸ்பி மாநில தலைவராக பொறுப்பேற்றுள்ள வழக்கறிஞர் ஆனந்தன், இந்த கொலைக்கு ஆற்காடு சுரேஷ் தரப்பினர் காரணம் அல்ல என்று கூறினார்.
இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக 5 வழக்கறிஞர்கள் உள்பட மொத்தம் 20 பேர் இதுவரை கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும், தாம்பரம் மண்ணிவாக்கம் பகுதியை சேர்ந்த ரவுடி சீசிங் ராஜா, சென்னை தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்த ரவுடி சம்பவம் செந்தில் ஆகிய இருவரையும் தனிப்படை போலீஸார் தேடி வருகிறார்கள்.
இதற்கிடையில் சமீபத்தில் ஆற்காடு சுரேஷின் நெருங்கிய உறவினர் பிரதீப் (28) என்பவரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர். அதில், பிரதீப், ஆம்ஸ்ட்ராங் கொலையில் நேரடியாக ஈடுபட்டு கொலையாளிகளுக்கு உதவி செய்தது தெரியவந்தது. மேலும் பிரதீப் ஊர்க்காவல் படையில் சிறிது காலம் பணியாற்றியவர் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
அவரிடம் நடத்தப்பட்ட அதிரடி விசாரணையின்போது, பிரதீப்பும், ஆம்ஸ்ட்ராங் இருக்கும் தெருவிலேயே வசிக்கிறாராம். தினமும் ஆம்ஸ்ட்ராங்கின் நடவடிக்கைகளை கண்காணிக்க கொலையாளிகள் பிரதீப்புக்கு செல்போன் வாங்கி கொடுத்தனராம். இதை வைத்துக் கொண்டு அவர் ஆம்ஸ்ட்ராங்கை ஒரு மாதமாக கண்காணித்து வந்துள்ளார். கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் ஒவ்வொரு நாளும் எங்கெங்கு செல்வார், அவரது அன்றாட நடவடிக்கைகள் என்ன என்பதை கடந்த ஒரு மாதமாக பிரதீப் நோட்டமிட்டு வந்துள்ளதும் தெரிய வந்தது.
ஆம்ஸ்ட்ராங்குடன் எப்போதும் 10 பேர் சுற்றியிருப்பார்களாம். ஆனால் மாலை வேளைகளில் இந்த எண்ணிக்கை குறைந்து காணப்படுமாம். இதை ஒரு மாதமாக கவனித்த பிரதீப், மாலை நேரம்தான் சரியான நேரம் என நேரம் குறித்துக் கொடுத்துள்ளதாக கூறிய காவல்துறையினர், அவரது வாக்குமூலத்தை தொடர்ந்து மேலும் 3 பேரை கைது செய்தனர்.
இநத் நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள 20 நபர்களின் சொத்துகளை முடக்க காவல்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களின், வங்கி கணக்கில் இருப்பில் உள்ள பணம், கொலைக்காக பரிமாறப்பட்ட தொகை முடக்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலைக்காக பரிமாறப்பட்ட பணத்தின் மூலம் வாங்கப்பட்ட சொத்துகள் எவ்வளவு என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.