சென்னை; சென்னைபில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்திய பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ”ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு” விசாரணையின்போது, குற்றம் சாட்டப்பட்ட 27 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜபடுத்த காவல்துறைக்கு நீதிபதி உத்தர விட்டார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 27 பேரையும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 30 ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை 5 ஆம் தேதி மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த பட்டப்பகல் கொலை தமிழ்நாடு மட்டும் இன்றி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி நாகேந்திரன், அவரது மகன் அசுவத்தாமன் மற்றும் பொன்னை பாலு உள்ளிட்ட 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் இவ்வழக்கில் ஏற்கனவே வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் குற்றம்சாட்டப்பட்ட 27 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு சென்னை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன்பாக இ(ஜூன் 16) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது நாகேந்திரன், அசுவத்தாமன் உள்ளிட்ட 27 பேர் சிறையில் இருந்த வாறு காணொலி மூலம் ஆஜராகி இருந்தனர்.
இதற்கிடையே குற்றம்சாட்டப்பட்டவர்களில் சிலர், இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி ஏற்கனவே நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில் இன்று (ஜூன் 16) மேலும், சிலர் இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி மனுத்தாக்கல் செய்தனர்.
இவர்கள் மட்டுமல்லாமல் இன்னும் சிலரும் இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க கோரி மனுத்தாக்கல் செய்ய உள்ளதாகவும் அதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு அனுமதியளித்து கால அவகாசம் வழங்கிய நீதிபதி அடுத்த விசாரணையின் போது குற்றம்சாட்டப்பட்ட 27 பேரையும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்துமாறு காவல் துறைக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூன் 30 ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.