பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் குறித்து வைரமுத்து அவதூறாக எழுதியிருப்பதாகவும், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் வலியுறுத்தியுள்ளார்.
திரைப்பாடலாசிரியர் வைரமுத்து, தினமணி இதழில், ஆண்டாள் குறித்து கட்டுரை எழுதியிருக்கிறார். இது குறித்து இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
“தமிழ் இலக்கிய முன்னோடிகள் வரிசைக் கட்டுரைகளில் கவிபேரரசு வைரமுத்து அவர்களின் “தமிழை ஆண்டாள்” எனும் தலைப்புக்குள் வைரமுத்து அவர்கள் அரங்கில் பேசிய பேச்சில் வந்த செய்திகளும் அது அப்படியே இன்று கட்டுரையாக வந்துள்ளது.
அமெரிக்க இன்டியானா பல்கலைக்கழகத்தில் சுபாஷ் மாலிக் வெளியிட்ட Indian Movements Sum Aspects of disserts Protest and reforms என்ற நூலில் எங்கள் தமிழ்தாய் ஆண்டாள் குறித்து அவதூறான செய்திகளை பதிவு செய்துள்ளார் என்பதை தேடிக்கண்டுபிடித்து இக்கட்டுரையில் வைரமுத்து அவர்கள் இணைத்துள்ளார். சூடிக் கொடுத்த சுடர் கொடி தேவதாசியாக வாழ்ந்து ஸ்ரீரங்கத்தில் மரணித்தாள், என்று எவனோ எழுதியதை மேற்கோள் காட்ட வேண்டிய அவசியம் என்ன? பக்தர்கள் இச்செய்தியை ஏற்க மாட்டார்கள் ஆனால் ஆணாதிக்க எதிர்ப்பாளர்களும் சமய சமூக மறுப்பாளர்களும் இதனை என்ணிப்பார்ப்பார்கள் என்று எழுதியுள்ளது எங்கள் இதயத்தில் தீராத வலியை ஏற்படுத்தியுள்ளது.
பார்வையாளராக ஒரு ஓரத்தில் இருந்த நான் உடனே எனது எதிர்ப்பை பதிவு செய்திருக்க வேண்டும். சபை நாகரீகம் பொதுப் பண்பாடு கருதி அமைதிகாத்தேன். கண்ணீர் வடித்தேன். சீதையின் மறு அவதாரமான எங்கள் கோதையை தேவதாசி என்று எவரோ அமெரிக்காவில் எழுதியதை தேடிப்பிடித்து இக்கட்டுரையில் இணைக்க வேண்டிய அவசியம் என்ன? கட்டுரையாளர் நாத்திகராக இருக்கலாம். பெண் ஆழ்வார் ஆண்டாள் வாழ்வின் அருளிச் செயல்களை ஏற்காதவராக இருக்கலாம். நாச்சியார் தமிழின் இனிமையையும் இலக்கியத்தரத்தையும் போற்றுவதற்கு வந்த கவிஞர் நாச்சியாரின் வரலாற்றை கொச்சைபடுத்த வேண்டிய அவசியம் என்ன?
தினமணி நாளிதழின் ஆசிரியர் வைத்தியநாதன அய்யா இதனை கவனித்து திருத்தி வெளியிட அறிவுறுத்தி இருக்க வேண்டாமா? மகாகவி பாரதியின் வாழ்வை, திருமந்திரம் எனும் தமிழ் மந்திரம் அருளிய திருமூலர் வாழ்வை, நற்றுணையாவது நமச்சிவாயவே என்று கல்லை தெப்பமாக்கிய நாவுக்கரசர் வாழ்வை, வாடிய பயிரை கண்ட போது வாடிய வள்ளலாரின் வாழ்வையும், இத்தகைய அருளாளர்களின் வரலாறுகளையும் தமிழ் இலக்கியப் பார்வையோடு எழுத வந்த கட்டுரையாளர் திராவிட இயக்கப் பார்வையோடு நாத்திக கண்ணோட்டத்தோடு தீய உள்நோக்கம் கொண்ட தவறான செய்திகளை பதிவிடுகிறார். சினிமாப்பாடல்கள், கவிதைகள், காவியங்கள், கட்டுரைகள் மூலம் புகழ் வெளிச்சம் பெற்றுள்ள வைரமுத்து அவர்கள் ஆழ்வார்களையும், நாயன்மார்களையும், ஆச்சார்ய பெருமக்களையும், வள்ளலாரையும் படித்து தான் பெற்ற தமிழ் இன்பத்தை கட்டுரையாக்கும் போது தன் சொந்தக் கொள்கைகளை தினித்து எம் தமிழ் வேதங்களை இழிவு படுத்துவது நியாயமா?
வாழையடி வாழை என வந்த திருக்கூட்டத்தில் இடம்பெற்றுள்ள தமிழ்ச்சான்றோர்களையும், தமிழர் சமய குருநாதர்களின் வரலாறுகளையும் கொச்சை படுத்துவது கண்டனத்திற்குறியது. ஆண்டாளை வேசி என எவராவது சித்தரித்தால் அதை எதிர்க்கவேண்டிய வைரமுத்து இப்படி எழுதி தமிழ்த்தாயை அவமானப் படுத்தலாமா? தமிழ்மணி, ஆன்மீகமமணி நடத்தி நாளும் தமிழ்ச்சேவை செய்து வரும் தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் இதனை ஒப்புக்கொள்கிறாரா? வைரமுத்து ரசிகர் மன்ற தலைவராக வைத்தியநாதன் அய்யா மாறிவிட்டாரா? தமிழை ஆண்டாள் கட்டுரைக்கு இச்செய்தி தேவை இல்லையே தவிர்த்திருக்க வேண்டாமா? கவிஞர் தமிழாற்றுப்படை எழுத முயற்சிக்கின்றாரா, இல்லை எம் தெய்வத்தமிழின் மீது நாத்திகத்தை ஏற்ற விரும்புகிறாரா? திராவிட க்கொள்கைகளை தினிக்க விரும்புகிறார்?
ஆண்டாளை பெருமைப்படுத்த முயற்ச்சிக்கின்றாரா ? இல்லை எம் தாய்த்தமிழை சிறுமைப்படுத்தி தமிழர்களின் உள்ளம் நோகச் செய்கிறாரா? தவறு நிகழும் போது தட்டிக்கேட்க வேண்டிய நான், சபை மரபு கருதி அமைதி காத்து கண்ணீர் வடித்து இந்த கண்டனக் கடிதத்தை எழுதுகிறேன்.
உடனடியாக வைரமுத்து மன்னிப்பு கேட்கவேண்டும்” என்று அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.